நாளை இரவு புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு புதிய கட்டுப்பாடுகள்: மெரினா, பெசன்ட்நகர் கடற்கரைக்கு செல்ல தடை

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, ஸ்டார் ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், கிளப் மற்றும் பார்களில் 80 சதவீத நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கி மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது. மெரினா, பெசன்ட்நகர் உட்பட கடற்கரை பகுதிகளுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு ஸ்டார் ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், கிளப், பார்களுக்கு கடும் கட்டுப்பாடுகளுடன் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் ஸ்டார் ஓட்டல், கிளப், பார் உரிமையாளர்கள், நிர்வாகிகள் என 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு கூடுதல் கமிஷனர்கள் அன்பு, பிரேம் ஆனந்த் சின்கா தலைமை வகித்தனர். அவர்களுடன் மயிலாப்பூர் துணை கமிஷனர்கள் திஷா மிட்டல், கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கோபி ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பின் வருமாறு:

* புத்தாண்டு கொண்டாட அனுமதி கோருவோர் நாளை மாலை 6 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை கொண்டாட்டங்களுக்கான சிறப்பு உரிமம் வழங்கப்படும்.

* ஸ்டார் ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் உணவு வழங்குதல் மற்றும் மதுபான விற்பனை, கொண்டாட்டங்களை நள்ளிரவு 1 மணியுடன் கண்டிப்பாக முடித்துக் கொள்ள வேண்டும்.

* நட்சத்திர ஓட்டல்கள், உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகளுக்கு வரும் வாகனங்கள் முறையாக சோதனை செய்யப்பட வேண்டும். தேவைப்படும் இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, வளாகத்திற்குள் வரும் நபர்கள் மற்றும் வாகனங்களின் விவரங்கள் பதிவு செய்ய வேண்டும்.  

* அரங்கத்திற்குள் 80 விழுக்காடுக்கு மேல் நபர்களை அனுமதிக்கக்கூடாது.

* நீச்சல் குளத்தின் மீதோ அல்லது அருகிலோ தற்காலிக மேடைகள் அமைத்தல் கூடாது.

* நீச்சல் குளங்களை நாளை மாலை 6 மணி முதல் புத்தாண்டு அன்று அதிகாலை  6 மணி வரை மூடி வைத்திருக்க வேண்டும்.

* கஞ்சா, போதை மருந்து உள்ளிட்ட போதைப்பொருட்கள் விநியோகம் செய்வதையோ, உட்கொள்வதையோ தடுத்து அதன் நடமாட்டமோ இல்லாமல் ஓட்டல் நிர்வாகத்தினர் கண்காணிக்க வேண்டும். இதுகுறித்து காவல்துறைக்கு உடனே தகவல் கொடுக்க வேண்டும்.

* விருந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வெளிநாட்டவர்களின், விசா, பாஸ்போர்ட் உள்ளிட்ட விவரங்களை ஓட்டல் நிர்வாகம் சரிபார்க்கவேண்டும்.

* கேளிக்கை நிகழ்ச்சிகள் நடக்கும் அரங்குகள் மற்றும் அறையில் பெண்கள் மற்றும் சிறுமிகளை கேலி செய்தல், அத்துமீறல்கள் போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ஓட்டல் நிர்வாகத்தினர் போதிய பணியாளர்களை நியமித்து கண்காணித்து தடுக்க வேண்டும். எல்லை மீறும் சமயத்தில், காவல் கட்டுப்பாட்டறைக்கு உடனடியாக தகவல் கொடுத்து அப்புறப்படுத்த வேண்டும்.

* கடற்கரைக்கு செல்ல தடை

புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று நிருபர்களுக்கு மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அளித்த பேட்டியை தொடர்ந்து, ெமரினா, பெசன்ட் நகர் கடற்கரை மணற்பரப்பில் புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக பொதுமக்களால் எழுப்பப்பட்ட சந்தேகங்களை தொடர்ந்து, விளக்கம் அளிக்கப்படுகிறது: “2023 புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பொதுமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 31.12.2022 அன்று இரவு 8 மணிக்கு மேல் சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட மெரினா, சாந்தோம், பெசன்ட்நகர் எலியட்ஸ், நீலாங்கரை, பாலவாக்கம், காசிமேடு, திருவொற்றியூர் உள்ளிட்ட அனைத்து கடற்கரை மணற்பகுதிகள் மற்றும் கடற்கரை ஓரங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. பொதுமக்கள் 31.12.2022 அன்று இரவு 8 மணிக்கு மேல் கடற்கரை மணற் பகுதிக்கு வரவேண்டாம். பாதுகாப்பு கருதி எடுத்த இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

* பட்டாசுகள் மற்றும் வெடி பொருட்கள் வெடிக்க அனுமதி கிடையாது.

* கலாசார நடனங்கள் தவிர ஆபாச மற்றும் அருவருக்கத்தக்க கேளிக்கை நடனங்களை தடை செய்ய வேண்டும்.

* நீச்சல் குளத்திற்கு செல்லும் வழிகளை அடைக்க வேண்டும்.

Related Stories: