வடக்கஞ்சேரி அருகே கோயில் திருவிழாவில் யானை மிரண்டு ஓடியதால் பரபரப்பு: வாலிபர் காயம் 6 பைக்குகள் சேதம்

பாலக்காடு: பாலக்காடு அருகே உள்ள வடக்கஞ்சேரி கிழக்கஞ்சேரியில் திருவரை அம்மன் கோயில் நிறைமாலை திருவிழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் அலங்கரிப்பட்ட மூன்று யானைகள் மீது அம்மன் வீதியுலா வந்தது. கோயிலின் அருகே வந்தபோது புத்தூர் தேவிநந்தன் என்ற யானை திடீரென மிரண்டோடியது. தொடர்ந்து வீதியுலா வந்த மற்றொரு யானையையும் தேவிநந்தன் முட்டி காயப்படுத்தியது.

 மேலும், கோயில் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 6 பைக்குகளை தூக்கிவீசி சேதப்படுத்தின. யானைகள் மிரண்டோடியதால் பக்தர்கள் அலறியடித்து தப்பியோடி உயிர்பிழைத்தனர்.

தேவிநந்தன் யானை மீது அமர்ந்திருந்த ஆலத்தூர் காட்டுச்சேரியைச் சேர்ந்த கிரீஷ் (35) கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை போலீசார் மீட்டு வடக்கஞ்சேரியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.கோயில் வளாகத்தில் அமைந்துள்ள நாகராஜர் கோயில் மேற்கூரையையும் யானைகள் சேதப்படுத்தின.

4 மணிநேர போராட்டத்திற்கு பின் மிரண்டோடிய யானையின் பாகன்களான வாசு, பிரசாத் மற்றும் மற்ற யானை பாகன்களும் ஒருங்கிணைந்து யானைகளை சங்கிலியால் பிணைத்து யானைகள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர். இந்த சம்பவம் குறித்து வடக்கஞ்சேரி எஸ்ஐ சுதீஷ்குமார் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: