சேலம் அருகே கொள்ளை முயற்சியில் இரும்பு கடை முதலாளியை குத்தி கொன்ற வடமாநில சிறுவர்கள்: மடக்கி பிடித்து விசாரணை

காடையாம்பட்டி: சேலம் அருகே பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கில், இரும்பு கடையை சாத்திவிட்டு வெளியே சென்ற முதலாளியை கொலை செய்த 2 வட மாநில சிறுவர்களை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே தீவட்டிப்பட்டி பகுதியில் சேலம் -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியவாறு இரும்பு கடை உள்ளது. இதனை தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே துறிஞ்சிப்பட்டி நடூர் பகுதியை சேர்ந்த ராஜா மகன் சந்தோஷ் (32) என்பவர் நடத்தி வந்தார். பீகார் மாநிலம் பேகுசிரா மாவட்டம் சீட்ஸ் பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள் கடையிலேயே தங்கியிருந்து பணியாற்றி வந்தனர்.

நேற்றிரவு வியாபாரம் முடிந்ததும் வழக்கம்போல் 9 மணிக்கு கடையை பூட்டிவிட்டு பணப்பெட்டியுடன் வீட்டுக்கு புறப்பட சந்தோஷ் தயாரானார். அந்த நேரத்தில் திடீரென அவரை, சிறுவர்கள் 2 பேரும் கத்தியால் குத்தி பணத்தை பறிக்க முயன்றனர். தொடை மற்றும் வயிறு உள்ளிட்ட பகுதிகளில் குத்தியதில் கீழே சாய்ந்தார். சத்தம் கேட்டு சாலையில் சென்ற பொதுமக்கள் விரைந்தனர். அவர்களை கண்டதும் 2 சிறுவர்களும் ஓட்டம் பிடித்தனர்.

அவர்களில் ஒருவனை மடக்கி பிடித்து, தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்தனர். அவர்களிடம் வாலிபரை ஒப்படைத்தனர். படுகாயமடைந்த சந்தோஷை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்த டாக்டர்கள் பரிசோதித்து விட்டு  சந்தோஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், தப்பி ஓடிய மற்றொரு சிறுவனை போலீசார் துரத்தி சென்று தீவட்டிப்பட்டி சுடுகாடு பகுதியில் மடக்கி பிடித்தனர். தொடர்ந்து இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த ஓமலூர் டிஎஸ்பி சங்கீதா சம்பவ இடத்தில் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: