நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் மாற்றம் நிகழும்: பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு

கோவை: நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் மாற்றம் நிகழும் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா அனைத்து மாநிலங்களுக்கும் சென்று கட்சியினரை நேரில் சந்தித்து தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கி வருகிறார். அந்த வகையில் ஜே.பி. நட்டா, தமிழகத்தில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை தொடங்கி வைத்து பிரசாரமும் மேற்கொண்டார். இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த நட்டாவுக்கு, கோவை விமான நிலையத்தில் மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் உள்பட பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதைத்தொடர்ந்து கோவையில் உள்ள தனியார் ஓட்டலில் கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்று வரும் பாஜக பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர்; பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா முன்னோக்கிச் சென்று ஒரு பெரிய பாய்ச்சலை எடுத்து வருகிறது. இந்தியா இப்போது பாதுகாப்பான கைகளில் உள்ளது என்று சொல்லலாம். இந்தியா தற்போது வலிமையுடன் முன்னேறி வருகிறது, விரைவில் உலகின் தலைசிறந்த தலைமையாக மாறும். பொம்மைத் தொழிலில் மிகப் பெரிய ஏற்றுமதியாளராக நாம் இருந்து வருகிறோம்.

ரசாயனத் துறை, மருந்துத் துறையிலும் நாம் சிறப்பாகச் செயல்படுகிறோம் என்பதைக் குறிப்பிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கொரோனா தடுப்பூசிகள் உலகம் வியந்து பாராட்டிய ஒன்று. தமிழகம் பழமையான மொழி, கலாச்சாரம் கொண்ட நிலம்; இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமின்றி சட்டமன்றத் தேர்தலிலும் மாற்றம் நிகழும். நம்பிக்கையான முன்னேற்றத்தை பார்த்து கொண்டு இருக்கின்றோம். பல்வேறு திட்டங்களின் மூலம் ஏழைகளின் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளோம். ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டுக்கு தலா 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. ரூ.1 லட்சம் கோடி விவசாய நலனுக்காக வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

Related Stories: