5 நாட்கள் நடைபெறும் ‘மஹோற்சவ விழா’ பரைக்கோடு ஸ்ரீகண்டன் சாஸ்தா கோயிலில் இன்று கொடியேற்றம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

மார்த்தாண்டம்: மார்த்தாண்டம் அருகே பரைக்கோடு ஸ்ரீகண்டன் சாஸ்தா திருக்கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் மஹோற்சவ விழா இன்று தொடங்கி 5 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாளான இன்று காலை 6 மணிக்கு கலச பூஜை, முளபூஜை, கொடி பூஜை நடைபெற்றது. 7 மணிக்கு சிறப்பு நெய் அபிஷேகமும், பெற்றோருக்கான பாத பூஜையும் நடந்தது. பாத பூஜையை ஹிந்து கோயில்கள் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் ஸ்ரீபதி ராஜ் ஜி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து நடைபெற்ற திருக்கொடியேற்றத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து காலை 9 மணிக்கு ஆழிபூஜை, மதியம் உச்சகால பூஜை, தீபாராதனை, மாலையில் பக்தி பஜனை, புஷ்பாபிஷேகம், ஐயப்ப சரிதம் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது. 2ம் நாள் விழாவில் காலை 7 மணிக்கு மிருத்துஞ்சய ஹோமம், பிம்பசுத்தி கிரியைகள், கலாசபிஷேகம் நைவேத்தியம், உச்சகால பூஜை, சிறப்பு தீபாராதனை, மாலை 3க்கு சிறுவர் சிறுமிகளுக்கான பாட்டு மற்றும் பேச்சு போட்டி, தேசபக்தி தெய்வீக பாடல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5 மணிக்கு வடிவீஸ்வரம் சாந்தா சுப்ரமணியம் குழுவினரின் பக்தி பஜனை, 6.30க்கு பகவதி சேவா முளபூஜை, இரவு 8 மணிக்கு முத்தாரம்மன் பஜனை குழுவினரின் பக்தி பஜனை நடக்கிறது.

3ம் நாள் விழாவில் காலை சுஹிர்த ஹோமம், கலச பூஜை, பொங்காலை பஞ்சலோக சிவேலி விக்ரகம் பிரதிஷ்டையும், மதியம் உச்சகால பூஜை, தீபாராதனையும் நடக்கிறது. மாலை 4 மணிக்கு பக்தி பஜனை, புஷ்பாபிஷேகம், இரவு 8 மணிக்கு தட்சிண ஷேத்திர வித்யார்த்தினி பிரமுக் மாநிலத் தலைவர் டாக்டர் சவிதா நடத்தும் சத்சங்கம் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது. 4ம் நாள் விழாவில் காலை சுதர்சன ஹோமம் உப தேவதைகளுக்கு கலச பூஜை, மதியம் உச்சகால பூஜை தீபாராதனை, பிற்பகல் 2 மணிக்கு யானை மீது பகவான் சாஸ்தா எழுந்தருளும் பவனி நடைபெறுகிறது.

இந்த பவனி பரைக்கோடு கண்டன் சாஸ்தா கோயிலில் இருந்து புறப்பட்டு ஆற்றுப்பாலம் வழியாக ஆலுவிளை, மேலக்கோணம், லைட் ஹவுஸ் ஆடிட்டோரியம் வழியாக அழகிய மண்டபம், பரைக்கோடு வழியாக மணலி சந்திப்பு சென்று பின்னர் கோயில் வளாகத்தை வந்தடைகிறது. இரவு 8 மணிக்கு பள்ளி வேட்டை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. 31ம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில் காலை சங்காபிஷேகம் பூஜை, ஆறாட்டு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

மதியம் உச்சகால பூஜை, தீபாராதனை, மாலை பக்தி பஜனை, 108 இளநீர் அபிஷேகம், பைரவர் மூர்த்தி பூஜை, அக்னி பூஜை, பூக்குழி இறங்குதல் ஆகியவை தொடர்ந்து நடைபெறுகிறது.விழாவுக்கான ஏற்பாடுகளை கண்டன் சாஸ்தா திருக்கோயில் நிர்வாக குழுவினர் மற்றும் மகிளா சமாஜம் ஆகியோர் இணைந்து செய்து வருகின்றனர்.

Related Stories: