எல்லையில் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயார்: வெளியுறவு அமைச்சர் வாங் யீ தகவல்

பீஜிங்: ‘இரு தரப்பு உறவுகளின் நிலையான மற்றும் உறுதியான வளர்ச்சிக்கு இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது’ என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ கூறி உள்ளார். கடந்த 2020ம் ஆண்டு கிழக்கு லடாக், கல்வான் எல்லையில் இந்திய, சீன ராணுவ வீரர்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். இந்த சண்டையில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர்.

சீன தரப்பில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியானதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக இருதரப்பு உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எல்லையில் குவிக்கப்பட்ட படைகளை வாபஸ் பெறுவது தொடர்பாக இரு நாட்டு ராணுவம் மற்றும் வெளியுறவுத்துறை சார்பில் 17 கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, கடந்த 9ம் தேதி அருணாச்சல பிரதேசம் தவாங் செக்டாரின் யாங்சே பகுதியில் மீண்டும் இந்திய, சீன துருப்புகள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 6 பேர் காயமடைந்தனர்.

இந்த பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக இரு நாட்டு ராணுவமும் கூறி உள்ளது. ஆனால் இந்த விவகாரத்தால் வரும் 2023ம் ஆண்டிலும் இந்தியா, சீனா உறவு சீராகாத நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில், உலக நாடுகளுடனான சீனாவின் வெளியுறவின் நிலை குறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் வாங் யீ பேட்டி அளித்தார்.

அதில், இந்தியா பற்றி குறிப்பிட்ட அவர், ‘‘சீனாவும் இந்தியாவும் இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளில் ஸ்திரத்தன்மையை நிலை நிறுத்த உறுதிபூண்டுள்ளன. இதற்காக ராணுவம் மற்றும் வெளியுறவு துறை வாயிலாக தொடர்ந்து பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன. இரு தரப்பு உறவுகளின் நிலையான மற்றும் உறுதியான வளர்ச்சிக்காக இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம்’’ என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை பார்த்து பயமில்லை

ரஷ்யா, பாகிஸ்தானுடன் வரும் ஆண்டிலும் சீனாவின் உறவு வலுவடையும் என குறிப்பிட்ட வாங் யீ, தைவான் விவகாரத்தில் அமெரிக்காவின் மிரட்டலுக்கு சீனா பயப்படவில்லை என்றும் கூறி உள்ளார்.

Related Stories: