சென்னை: 2021-22 மற்றும் 2022-23 ஆண்டிற்கான பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் 2.80 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காலநிலை மாற்றம் என்பது உலகின் மிகப்பெரிய சவாலான காரியமாக விளங்குகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகளையும், இயற்கை பேரிடர்களை எதிர்க்கொள்ளவும், அப்பேரிடர்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் திறன் கொண்ட வண்ணம் அதிகப்படியான நாட்டு மரங்களை நடுவது மற்றும் ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு சார்பில் கடந்த செப்டம்பர் மாதம் ‘‘பசுமை தமிழகம் திட்டம்’’ தமிழக முதல்வரால் தொடங்கப்பட்டது.
தமிழகத்தை பொறுத்தவரை மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரத்து 60 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. இதில் தற்போது 31 ஆயிரத்து 194 சதுர கி.மீ பரப்பளவில் பசுமை போர்வை உள்ளது. கடந்த 1988ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேசிய வனக்கொள்கையின்படி, ஒரு மாநிலத்தின் நிலப்பரப்பில் 33% அதாவது தமிழகத்தில் 42 ஆயிரத்து 919 சது கி.மீ பரப்பளவில் பசுமை போர்வை இருக்க வேண்டும். அதன்படி, தமிழகம் இந்த இலக்கை எட்ட மேலும் 13 ஆயிரத்து 500 சதுர கி.மீ பரப்பளவு (மொத்த பரப்பில் 9%) பசுமை போர்வையை உருவாக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் தற்போது உள்ள காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவை 23.98% இருந்து 33% ஆக உயர்த்த அடுத்த 10 ஆண்டுகளில் 260 கோடி உள்நாட்டு வகையை சேர்ந்த மரங்கன்றுகள் நட வேண்டும்.
அந்தவகையில் நடப்பாண்டு பட்ஜெட் தொடரில் ‘‘பசுமை தமிழகம் திட்டம்’’ என்பது அறிவிக்கப்பட்டது. இதற்கான திட்ட மதிப்பீடாக 2021-22ம் ஆண்டில் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மரக்கன்றுகளை உருவாக்க ரூ.21 கோடியும், 2022-23 ஆண்டில் 1 கோடியே 30 லட்சம் மரக்கன்றுகளை நட ரூ.17 கோடியே 80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து பசுமை தமிழக திட்டத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாவது: பசுமை தமிழகம் திட்டத்தின் முக்கிய குறிக்கோளாக தமிழகத்தின் காடுகளை தேசிய வனக்கொள்கையின் இலக்கை அடைய கொண்டுவர வேண்டும்.
அதேபோல் உள்ளூர் மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு பொருளாதார மேம்பாடு அடைய செய்தல், இந்த மரக்கன்றுகள் வனங்களுக்கு உள்ளேயும், மேலும் வெளியேயுள்ள விவசாய நிலங்கள், கல்வி நிலையங்கள், தொழிற்சாலை இடங்கள், கோயில் நிலங்கள், புனித தலம் மற்றும் நகர்புற பகுதிகளில் நடவு செய்து கால நிலை மாற்றத்தின் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்பதையே நோக்கமாக கொண்டுள்ளோம். மேலும், இந்த மரக்கன்று நடவு செய்தலில் வனத்துறை மட்டுமின்றி இதர துறைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனிநபர் மற்றும் அனைத்து தரப்பினரையும் பங்கு பெற செய்தல் ஆகும்.
இந்த பசுமை தமிழ்நாடு இயக்கம் மூலம் பூமி பரப்பில் மரங்களின் அடர்த்தியை உயரத்துவதன் மூலம் பல்லுயிர் பெருக்கம் மற்றும் கார்பன் சேமிப்பு மற்றும் வரிசை படுத்தல் அடைய செய்யும். இயற்கை வளங்கள் மேம்பாட்டுக்கும் உற்பத்திக்கும் உதவும் வகையில் வீரியமிக்க மரக்கன்றுகள், மண்ணிற்கேற்ற செடி இனங்கள் தேர்வு செய்து உரிய காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலமாக உயிர் செடிகள் விகிதம் அதிகரிப்பதை உறுதி செய்ய முடியும். பசுமை தமிழகம் திட்டத்திற்கு என மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, புதிய மரக்கன்றுகளை நடுதல் மற்றும் ஏற்கனவே உள்ள மரங்களின் இருப்பை நிலை நிறுத்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது.
தற்போதைய நிலையில் 2021-22 மற்றும் 2022-23ம் ஆண்டிற்கான இலக்காக 2.50 கோடி மரக்கன்றுகளை நட பசுமை தமிழகம் மூலமாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 2.80 கோடி
மரக்கன்றுகள் நடப்படப்பட்டுள்ளது. குறிப்பாக நடவு செய்யப்பட்ட செடிகளின் எண்ணிக்கையில் வனத்துறை தரப்பில் 1.10 கோடி மரக்கன்றுகளும், இதர துறைகள் (வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நாற்றங்கால்கள்) 1.70 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை திண்டுக்கல் மாவட்டத்தில் 14.18 லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளன. மேலும் மரக்கன்றுகளுக்கான விதைகளை பெற ஆன்லைன் மூலமாக 1,540 பேர் 14.86 லட்சம் விதைகளை முன்பதிவு செய்துள்ளனர். மரக்கன்றுகளின் நடவு, பிழைப்புத்திறன் (Survival Rate) போன்றவற்றை கண்காணிப்பதற்கு அனைத்து நடவு இடங்களின் விவரங்கள் புவிக்குறியீடு தரவுகளுடன் சேகரிக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
