மாமல்லபுரத்தில் புத்தாண்டு கொண்டாட விதிமுறைகள்; ரிசார்ட், ஓட்டல் உரிமையாளர்களுடன் மாவட்ட எஸ்.பி. ஆலோசனை: புதிய வைரஸ் பரவுவதால் மாஸ்க் கட்டாயம்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஓட்டல்கள், ரிசார்ட்கள்  கடைபிடிக்க வேண்டிய விதி முறைகள் குறித்து ரிசார்ட் மற்றும் ஓட்டல்கள் உரிமையாளர்களுடன்  ஆலோசனை கூட்டம்  மாமல்லபுரத்தில் உள்ள  தனியார் ஓட்டல் ஒன்றில் நேற்றுமுன்தினம் நடந்தது. கூட்டத்திற்கு  மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன் தலைமை தாங்கினார். மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் முன்னிலையில் வகித்தார். கூட்டத்தின் போது  புத்தாண்டு அன்று ரிசார்ட் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள்  கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. பிரதீப் ஆலோசனை வழங்கினார்.

அப்போது அவர் பேசியது, சீனாவில் உருமாறிய கொரோனாவாக மீண்டும் புதிய வைரஸ் தொற்று பரவிவருகிறது. அதனால் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஓட்டல்களுக்கு வருபவர்கள் முகக் கவசம் மற்றும் சானிடைசர் அணிவதுடன் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், கொரோனா விதிமுறைகளை ஓட்டல் உரிமையாளர்கள் உறுதிபடுத்த வேண்டும், அதேப்போல் கஞ்சா, அபின் போன்ற போதை பொருட்களை கொண்டு வருபவர்களை  அனுமதிக்க கூடாது. தங்கும் ஓட்டல்களில் விருந்தினர்கள் யாராது இதுபோன்ற போதை பொருட்களுடன் பிடிபட்டால் போதை பொருட்களை கொண்டு வரும் நபர் மீதும், அந்த ஓட்டல்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்ற செயல்களை கண்காணிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் முதல் முட்டுக்காடு வரை இ.சி.ஆர். சாலையில் உள்ள 400 சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் பதிவு ஆகும் காட்சிகள் போலீசார் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். மேலும் இசிஆர் சாலை மற்றும் ஓஎம்ஆர் சாலைகளில் பல்வேறு இடங்களில்  செக்போஸ்ட் அமைத்து வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும். இவ்வாறு எஸ்.பி. பிரதீப் தெரிவித்தார்.

Related Stories: