நூறு நாட்களை கடந்து நடந்துவரும் இந்திய ஒற்றுமை யாத்திரை டெல்லியில் நுழைந்தது ராகுல் நடைபயணம்: மதவெறுப்பு அரசியலுக்கு எதிராக அன்பை பரப்புவோம் என செங்கோட்டையில் பேச்சு, கமல்ஹாசன் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

புதுடெல்லி: இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி ராகுல் மேற்கொண்டு வரும் நடைபயணம் நூறு நாட்களை கடந்து நேற்று டெல்லிக்குள் நுழைந்தது. இந்த யாத்திரையில், சோனியா, பிரியங்கா, நடிகர் கமல்ஹாசன் உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். நேற்றைய நடைபயணத்தை செங்கோட்டையில் நிறைவு செய்த ராகுல், ‘மத வெறுப்பு அரசியலுக்கு எதிராக அன்பை பரப்புவோம்’ என வலியுறுத்தினார். இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி, ‘பாரத் ஜோடா யாத்ரா’ என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்கள் 12 மாநிலங்கள் வழியாக 3,570 கி.மீ நடைபயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி தொடங்கினார்.

தமிழகத்தில் இருந்து தொடங்கிய யாத்திரை, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியானா என 9 மாநிலங்களை கடந்து நேற்று தலைநகர் டெல்லிக்குள் நுழைந்தது. 108 நாட்கள் 3,000 கி.மீட்டரை கடந்துள்ள யாத்திரையில் ராகுலுக்கு ஆதரவு தெரிவித்து, நடிகர், நடிகைகள், முன்னாள் மற்றும் இன்னாள் உயரதிகாரிகள், மாஜி ரிசர்வ் வங்கி ஆளுநர், எதிர்க்கட்சி தலைவர்கள் என பலரும் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில், அரியானா-டெல்லி எல்லையான பரிதாபாத் நகரில் இருந்து நேற்று காலை டெல்லி எல்லைக்குள் வந்த ராகுலுக்கு காங்கிரஸ் மற்றும் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பல இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டு பாடல்களை பாடியும், நடனங்கள் ஆடியும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள், ‘வெறுப்பை விடுங்கள்; இந்தியாவை ஒன்றுபடுத்துங்கள்... ராகுல் ஜிந்தாபாத்...’ என்று கோஷம் எழுப்பினர். இந்த யாத்திரையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி (மாஸ்க் அணிந்தபடி கலந்துகொண்டார்), பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், பவன் கேரா, பூபேந்திர சிங் ஹூடா, குமாரி செல்ஜா, ரன்தீப் சுர்ஜவாலா, திமுக சார்பில் எம்பிக்கள் தமிழிச்சி தங்க பாண்டியன், கலாநிதி வீராசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

காலை சுமார் 11 மணிக்கு ஆசரம் சவுக் பகுதிக்கு வந்த ராகுல் காந்தி, அங்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், அங்கிருந்து கிளம்பிய அவர், பிற்பகல் ஹசாரத் நிஜாமுதீன் பகுதிக்கு வந்தார். அங்கு உலக புகழ் வாய்ந்த மசூதிக்கு சென்று ராகுல் வழிபாடு செய்தார். தொடர்ந்து, 4.30 மணியளவில் அனக்பால் தோமர் சர்கிள் பகுதிகு வந்தடைந்தார். சிறிது நேர ஓய்வுக்கு பின்னர் மாலை 5 மணிக்கு தொண்டர்களின் ஆரவாரத்துடன் இந்தியா கேட் பகுதிக்கு வந்த ராகுல், திலகர் பாலம், ஐடிஓ, டெல்லி கேட் ஆகிய பகுதிகளை வழியாக பயணித்து செங்கோட்டை வந்தடைந்தார். செங்கோட்டையில் ராகுல் பேசியதாவது:

நாட்டின் சாமானிய மக்கள் தற்போது அன்பை பற்றி பேசத் தொடங்கி உள்ளனர்.   ஒவ்வொரு மாநிலத்திலும் லட்சக்கணக்கான மக்கள் யாத்திரையில் கலந்து   கொண்டனர். பாஜ - ஆர்எஸ்எஸ் வெறுப்புணர்வை  பரப்புகிறார்கள். நாங்கள்  அன்பை பரப்புகிறோம். இந்த நடைபயணத்தில்  இந்துஸ்தானும் அன்பும் நிறைந்து  இருக்கிறது. ஜாதி, மதம், பணக்காரன், ஏழை  என்று எந்த பாகுபாடும்  பார்க்காமல் அனைவரையும் அரவணைத்து செல்கிறது.  ஆர்எஸ்எஸ் - பாஜவின்  அனைத்து கொள்கைகளும் அச்சத்தை விதைப்பதுதான்.  அனைவரும் அச்சத்தில் இருக்க  வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். இந்த  அச்ச உணர்வை வெறுப்பாக  மாற்றுகிறார்கள்.

ஆனால், நாங்கள் இதை அனுமதிக்க  மாட்டோம். நாங்கள் அன்பை  பரப்புகிறோம். அனைத்து இந்தியர்களையும் அரவணைத்து  செல்கிறோம். அன்பின்  மூலம் மக்களை ஒன்றிணைக்கும் இந்தியாவிற்கு வித்தியாசமான வழியைக்   காண்பிப்பதே யாத்திரையின் நோக்கம்.  கன்னியாகுமரியில் இருந்து  நடந்தே வந்திருக்கிறேன், நாடு முழுவதும் அன்பு  மட்டுமே இருக்கிறது,  வெறுப்பு இல்லை என்று சொல்ல முடியும். இந்த யாத்திரை வேலையின்மை, விலைவாசி  உயர்வு,  பயம் மற்றும் வெறுப்புக்கு எதிரானது. இந்தியாவை உடைக்க யாரையும்  அனுமதிக்க  மாட்டோம். தொடர்ந்து போராடுவோம். உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக 24 மணி நேரமும் தொலைகாட்சிகளில் இந்து-முஸ்லிம்  என்ற பெயரில் வெறுப்பு பரப்பப்படுகிறது.

மதவெறியை ஒரு ஆயுதமாக பாஜ  பயன்படுத்துகிறது. ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் சக்திகளின் உத்தரவின் பேரில் எப்போதும் தொலைக்காட்சியில், தனது இமேஜை அழிக்க பிரதமர் மோடியும், ஆளும் பாஜவும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவிட்டுள்ளனர். ஆனால் ஒரு மாதத்தில் உண்மையை நாட்டுக்கு நான் காட்டியுள்ளேன். மத வெறுப்பை பரப்பிவிட்டு, உங்கள் துறைமுகங்கள், விமான நிலையங்கள், சாலைகள் மற்றும் பிற சொத்துக்கள்  அனைத்தையும் தங்கள் நண்பர்களுக்கு விற்றுவிடுவார்கள். இது மோடி அரசு அல்ல, அம்பானி-அதானி அரசு.  பெரும் தொழிலதிபர்களுக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் வழங்கப்படுகின்றன, ஆனால்  சாமானியர்களுக்கு அல்ல. இது, கொள்கைகள் அல்ல.

சிறு வணிகர்கள், வியாபாரிகள்,  விவசாயிகளை அழிக்கும் ஆயுதங்கள். 3,000 கிலோ மீட்டருக்கு மேல்  நடைபயணம் மேற்கொண்டதால் நான்  களைப்பு அடையவில்லை. இதற்கு நீங்கள் கொடுத்த  அன்பும் புத்துணர்ச்சியுமே  காரணம். அனைவருக்கும் நன்றி தெரிவிக்க  விரும்புகிறேன். இந்தியா எங்களுக்கு  உதவியிருக்கிறது. அதை ஒருபோதும் மறக்க  மாட்டோம். இவ்வாறு அவர் பேசினார். ராகுல் யாத்திரயை முன்னிட்டு டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும், பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. இன்று முதல் 9 நாட்கள் ஓய்வெடுக்கும் ராகுல், ஜன. 2ம் தேதி மீண்டும் யாத்திரையை தொடங்கி உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மாநிலங்கள் வழியாக ஜம்மு காஷ்மீரில் நிறைவு செய்கிறார்.

* யாராலும் தடுத்து நிறுத்த முடியாது

காங்கிரசின் மீடியா பொறுப்பாளர் பவண் கேரா கூறுகையில், ‘‘கொரோனா என்பது தீவிரமான பிரச்னை. அதை பாஜ தங்கள் அரசியலின் கருவியாக ஆக்கிக் கொள்ளக் கூடாது. யாத்திரையை நிறுத்த உங்களுக்கு தைரியம் இருந்தால், அவ்வாறு செய்யுங்கள். அனைத்து கொரோனா விதிகள் மற்றும்  நெறிமுறைகளை நாங்கள் பின்பற்றுவோம். பாரத் ஜோடோ யாத்ரா முன்னோக்கி நகர்வதை யாராலும் நிறுத்த முடியாது. தொற்றுநோய்களின் உடையில் அரசியல் விளையாடுவதை நிறுத்துங்கள். ராகுல் காந்தியை அவதூறாகப் பேசுவதற்கும், யாத்திரையை எப்படியாவது தடம் புரளச் செய்வதற்கும் பாஜ மேற்கொண்ட ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியடைந்துவிட்டது’’ என்று தெரிவித்தார்.

Related Stories: