மீண்டும் அச்சுறுத்தும் வைரஸ்!: புதிய வகை கொரோனா பரவலை இந்தியாவில் கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கிய ஆலோசனை..!!

டெல்லி: புதிய வகை கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா திரிபு மிக வேகமாக பரவி வருகிறது. சீனாவில் வேகமெடுத்துள்ள ஒமிக்ரான் பி.எப்.7 தொற்று இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. பி.எப்.7 மற்றும் பி.எப்.12 ஆகிய 2 வகை தொற்று குஜராத் மாநிலம் வதோகரா மற்றும் அகமதாபாத்தில் மூவரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் இருவர் குணமடைந்துவிட்டதாகவும், முதல் தொற்று பாதிப்பு கடந்த ஜூலை மாதமே கண்டறியப்பட்டதாகவும் ஒன்றிய அரசு கூறியுள்ளது.

இதேபோன்று ஒடிசாவில் ஒருவரும் பி.எப்.7 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய அரசு குறிப்பிட்டுள்ளது. இதனிடையே உருமாறிய ஒமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உயர்மட்டக்குழு நிபுணர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அனைத்து மாநிலங்களிலும் கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சமரசம் கூடாது என்றும் கொரோனா கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

இந்நிலையில், புதிய வகை கொரோனா பரவலை இந்தியாவில் கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். டெல்லியில் இன்று பிற்பகல் உயர்நிலைக் குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். சீனாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து அவசர ஆலோசனை நடைபெறவுள்ளது. உருமாற்றம் பெற்ற பி - எப் 7 வகை கொரோனாவால் இந்தியாவில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: