திருச்செந்தூர் - நெல்லை வழித்தடத்தில் 110 கிமீ வேகத்தில் சீறிப் பாய்ந்த மின்சார ரயில்-அதிகாரிகள் முன்னிலையில் சோதனை ஓட்டம் வெற்றி

நெல்லை :  அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு கூடுதல் ரயில் வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்ற பயணிகளின் கோரிக்கையை ஏற்று, நெல்லை - திருச்செந்தூர் வழித்தடத்தில் கடந்த 2 ஆண்டுகளாக மின்மயமாக்கல் பணிகள் நடந்தன. இப்பணிகள் நிறைவுற்ற நிலையில், கடந்த 17ம் தேதி இரவு 10.30 மணிக்கு நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு மின்சார இன்ஜின் சோதனை ஓட்டம் நடத்தி முடிக்கப்பட்டது. இவ்வழித்தடத்தில் மின்சார ரயில்களை இயக்கலாம் என ரயில்வே உள்ளூர் பொறியாளர்கள் உறுதி அளித்தனர்.

அதன்பேரில் புதிய மின்மய ரயில் பாதையை நேற்று தெற்கு ரயில்வே தலைமை முதன்மை மின் பொறியாளர் சித்தார்த்தா ஆய்வு செய்தார். சிறப்பு ரயில் மூலம் மதுரையில் இருந்து நெல்லை வந்த அவர், நேற்று காலை 9 மணிக்கு நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து மின்மயமாக்கல் ஆய்வை தொடங்கினார். குறிச்சி துணை மின் நிலையம், செய்துங்கநல்லூர் ரயில்வே மேம்பாலம், வைகுண்டம் அருகே உள்ள ஆற்றுப்பாலம், நாசரேத்தில் உள்ள துணை மின் நிலையம், ஆறுமுகநேரி ரயில்வே கேட் உள்ளிட்ட 14 இடங்களில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

பின்னர் நேற்று மாலை 3.05 மணிக்கு மின்சார இன்ஜின் பொருத்தி ரயிலின் சோதனை ஓட்டம் திருச்செந்தூரில் தொடங்கியது. இதற்காக திருச்செந்தூரில் இருந்து நெல்லை வரை இருப்புப்பாதை மின் லைனில் 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்பட்டது.

திருச்செந்தூரில் இருந்து புறப்பட்ட மின்சார ரயில் சில இடங்களில் 90 கிமீ வேகத்திலும், சில இடங்களில் 110 கிமீ வேகத்திலும் சீறிப் பாய்ந்து வந்தது. முக்கிய ரயில்வே கேட்டுகளின் அருகே ரயில்வே ஊழியர்கள் நின்று கொண்டு தண்டவாளத்தை கடக்க முயலும் பொதுமக்களை எச்சரித்தபடியே நின்றனர். மாலை 4.10 மணிக்கு மின்சார ரயில் நெல்லை வந்து சேர்ந்தது. இந்த ஆய்வில் மதுரை கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளர் ரமேஷ்பாபு, மூத்த இயக்க மேலாளர் சபரிஸ் குமார், பாதுகாப்பு அதிகாரி முகைதீன் பிச்சை, நெல்லை சந்திப்பு ரயில் நிலைய மேலாளர் முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

2 வாரத்தில் மின்சார ரயில் இயக்கம்

நெல்லை - திருச்செந்தூர் வழித்தடத்தில் மின்சார ரயில் இயக்கம் குறித்து கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் ரமேஷ்பாபு கூறுகையில், ‘‘நெல்லை - திருச்செந்தூர் மின்மயமாக்கப்பட்ட பாதையை முழுமையாக ஆய்வு நடத்தி வருகிறோம். இதற்காக 14 இடங்களில் உபமின்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடந்தது. இன்னும் இரு வாரங்களில் நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு மின்சார இன்ஜினை கொண்டு ரயில்கள் இயக்கப்படும்’’ என்றார்.

Related Stories: