நாகர்கோவிலில் 131 வீடுகள் இடித்து அகற்றும் பணி தொடக்கம்

நாகர்கோவில் : நாகர்கோவிலில் நீர்நிலை புறம்போக்கில் இருந்த 131 வீடுகளை இடித்து அகற்றும் பணி நேற்று தொடங்கியது. அதிகாரிகளுடன் சிலர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் நீர் நிலை புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் பேரில் தற்போது நீர் நிலை ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாகர்கோவில் பழையாற்றில் ஒழுகினசேரியில் இருந்து பறக்கின்கால்வாய் பிரிந்து பறக்கை பெரியகுளம் வரை செல்கிறது. இந்த கால்வாயின் இருபுறங்களும் ஏராளமான ஆக்ரமிப்புகள் இருந்தது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து பறக்கின் கால்வாய் பகுதியில் ஆக்ரமிப்பு வீடுகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.

அந்த வகையில் மொத்தம் 519 வீடுகள், கட்டிடங்களை இடித்து அகற்ற தீர்மானிக்கப்பட்டது. ஏற்கனவே 380க்கும் மேற்பட்ட வீடுகள், கட்டிடங்கள் அகற்றப்பட்டு விட்டன. 131 வீடுகள், கட்டிடங்கள் அகற்றும் பணி நேற்று தொடங்கியது. நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட இடலாக்குடி அருகே உள்ள குளத்தூர், சுலைமான் நகர், முகமது நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த ஆக்ரமிப்பு வீடுகள், கட்டிடங்கள் அகற்றப்பட்டன.

இது தொடர்பாக பொதுப்பணித்துறை அளவீடு செய்து குறியீடுகள் வரையப்பட்டு இருந்தது. மேலும் நோட்டீசும் கொடுக்கப்பட்டு இருந்தது.  இதையடுத்து நேற்று நீர் வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் கிங்ஸ்லி மேற்பார்வையில் ஜேசிபி மூலம் ஆக்ரமிப்பு வீடுகளை இடிக்கும் பணிகள் நடந்தன. இதில் குளத்தூர் பகுதியில் 39 வீடுகளும், சுலைமான் நகரில் 22 வீடுகளும், முகமது நகரில் 11 வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் அடங்கும் இதில் ஒரு சில வீடுகளில் இருந்தவர்கள் தங்களுக்கு அவகாசம் வேண்டும் என கேட்டனர்.

அதன்படி குளத்தூரில் தாணம்மாள், முருகேஸ்வரி ஆகியோர் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வில்லை. எனவே வீடுகளை இடிக்க கூடாது என கூறி வீட்டு முன் அமர்ந்தனர். அவர்களுக்கு அவகாசம் அளித்தனர். இதே போல் முகமது நகர் பகுதியிலும் சில வீடுகளுக்கு அவகாசம் கொடுக்கப்பட்டது. குறியீடு செய்யாமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடிப்பதாக கூறி சிலர் வாக்குவாதம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

 இதையடுத்து சர்வேயர் வரவழைக்கப்பட்டு அளவீடு பணியும் நடந்தது. ஆக்ரமிப்பு அகற்றும் பணியை தொடர்ந்து அகஸ்தீஸ்வரம் தாசில்தார் தலைமையில் வருவாய் அதிகாரிகள் வந்திருந்தனர். இன்ஸ்பெக்டர் ராமர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மின் வாரிய பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

கடைகளை இடிக்க அறநிலையத்துறை எதிர்ப்பு

இதற்கிடையே அறநிலையத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அந்த பகுதியில் அறநிலையத்துறைக்கு ெசாந்தமான கடைகள் உள்ளன. எனவே அவற்றை இடிக்க கூடாது என ஏற்கனவே இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி  உயர் அதிகாரிகளுக்கு மனு செய்திருப்பதாக கூறினர். நீர் நிலை புறம்போக்கில், அறநிலையத்துறை கடை எப்படி வந்தது என வருவாய்த்துறை அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். உயர் அதிகாரிகள் முடிவுப்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.

Related Stories: