சீன மோதல் குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு: மாநிலங்களவை தலைவர் தன்கர் அதிருப்தி

புதுடெல்லி: இந்தியா, சீனா எல்லையில் வீரர்கள் மோதிக் கொண்டது தொடர்பாக விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து மாநிலங்களவையில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைக்கு இடையூறு செய்வது சரியான அறிகுறியல்ல என துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் அதிருப்தி தெரிவித்தார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 7ம் தேதி தொடங்கி வரும் 29ம் தேதி வரை நடக்க உள்ளது. 2 நாள் வார விடுமுறைக்குப் பிறகு நேற்று நாடாளுமன்றம் மீண்டும் கூடியது. இதில், கடந்த 9ம் தேதி அருணாச்சல பிரதேசத்தின் தவாங் எல்லையில் இந்தியா, சீன வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டுமென இரு அவையிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்தினர்.

மாநிலங்களவையில் விதி எண் 267ன் கீழ் வழங்கப்பட்ட 9 ஒத்திவைப்பு தீர்மானங்களும் முறையாக இல்லாததால் ஏற்றுக் கொள்ளப்படாது என அவைத் தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கர் நிராகரித்தார். மேலும் அவர், ‘‘எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைக்கு இடையூறு செய்வது நல்ல அறிகுறி அல்ல. இங்கு அனைவரும் விதிகளை பின்பற்ற வேண்டும். அனைத்து விஷயங்களும் விதிமுறைப்படியே நடக்கும்’’ என்றார். இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். அப்போது பேசிய மாநிலங்களவையின் எதிர்க்கட்சி தலைவரான காங்கிரசின் மல்லிகார்ஜூனா கார்கே, ‘‘விவாதத்திற்கு அனுமதிக்க அவைத் தலைவருக்கு முழு அதிகாரம் உண்டு. ஆனால் அவைத்தலைவர் அதை மறுக்கிறார். இந்தியாவின் நிலத்தை சீனா ஆக்கிரமித்து வருகிறது. இந்த பிரச்னையை நாம் விவாதிக்கவில்லை என்றால் வேறு எதைப் பற்றி பேசுவது?’’ எனக்கூறி அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார். அதைத் தொடர்ந்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

* முட்டுக்கட்டை போடுகின்றனர்

மாநிலங்களவையின் ஆளுங்கட்சி தலைவர் பியூஸ் கோயல் கூறுகையில், ‘‘எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற விதிகள், ஒழுங்குமுறைகளுக்கு மதிப்பதில்லை. அவைத் தலைவரின் பேச்சுக்கு செவிசாய்ப்பதில்லை. குறிப்பாக காங்கிரஸ் மோசமான அரசியலை மேற்கொள்கிறது. இந்தியா, சீன வீரர்கள் மோதல் விவகாரத்தை அரசியலாக்க வேண்டும். நாடாளுமன்ற செயல்பாடுகளை முடக்குவதற்காகவே எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்கின்றன’’ என குற்றம் சாட்டினார்.

Related Stories: