ஜே.பி நட்டா பதவிகாலம் முடியும் நிலையில் ஜனவரியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம்? கர்நாடகா அல்லது ம.பி-யில் நடத்த முடிவு

புதுடெல்லி: பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் பதவிகாலம் வரும் ஜனவரியில் முடியும் நிலையில், கர்நாடகா அல்லது மத்திய பிரதேசத்தில் தேசிய செயற்குழு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை  நடத்தப்படுகிறது. இந்த கூட்டங்கள் ஆண்டின் முதல் மற்றும் கடைசி காலாண்டில்  நடத்தப்படும். கடைசியாக கட்சியின் செயற்குழு கூட்டம் கடந்த அக்டோபரில்  ஐதராபாத்தில் நடைபெற்றது.

வரும் ஜனவரி நடுப்பகுதியில் பாஜகவின் தேசிய செயற்குழுக்  கூட்டம் நடைபெறவுள்ளது. அடுத்தாண்டு மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், கர்நாடகா, தெலங்கானா, திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து, மிசோரம் ஆகிய 9 மாநிலங்களில் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால், இதில் ஏதேனும் ஒரு மாநிலத்தில் தேசிய செயற்குழு நடத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது. இருந்தாலும், கர்நாடகா அல்லது மத்திய பிரதேசத்தில் நடத்துவதற்காக வாய்ப்புகள் உள்ளதாகவும், வரும் ஒரு சில வாரங்களில் தேசிய செயற்குழு நடக்கும் மாநிலம், தேதி குறித்த முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் வரும் ஜனவரி 20ம் தேதியுடன் நிறைவடைகிறது என்பதால், அவரது பதவிகாலம் நீடிக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஒருவேளை அவரது பதவிகாலம் நீடிக்கப்பட வேண்டும் என்றால், பாஜகவின் தேசிய குழு கூட்டத்தின் ஒப்புதலை பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: