கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் எந்த இழப்பீடும் கொடுக்க முடியாது: பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அதிரடி

பாட்னா: கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் எந்த இழப்பீடும் கொடுக்க முடியாது என பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆவேசமாக தெரிவித்துள்ளார். பிகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50-ஆக அதிகரித்துள்ளது. பீகார் மாநிலத்தில் தற்போது சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.  எதிர்க்கட்சியான பாஜக அவையில் பல்வேறு கேள்விகளை எழுப்பி அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், இன்று கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது, பிகாரில் மது விலக்கு அமலில் உள்ள போதிலும், அதனை நடைமுறைப்படுத்துவதில் நிதிஷ்குமார் அரசு தோல்வி அடைந்துவிட்டதாக பாஜக குற்றசாட்டியது. மேலும், கள்ள சாராய விற்பனையை அரசு தடுக்க தவறிவிட்டதாக பாஜக எம்.எல்.ஏக்கள் முழக்கமிட்டனர். அப்போது ஆவேசமாக பேசிய முதலமைச்சர் நிதிஷ் குமார், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு அளிக்காது.

குடித்தால் உயிரிழப்பீர்கள் என நாங்கள் தொடர்ந்து எச்சரித்து வருகிறோம். அப்படியிருந்தும், குடித்து உயிரிழப்பவர்களுக்கு எப்படி இழப்பீடு தர முடியும்? என கேள்வி எழுப்பினார். கள்ளச்சாராயம் குடித்தால் மரணமடைவீர்கள், கள்ளச்சாராய விவகாரத்தில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என நிதிஷ்குமார் கூறினார். கள்ளச்சாராயம் குறித்து இத்தனை பேர் இறந்தது படுகொலை; பீகார் அரசே இதற்கு பொறுப்பு என பாஜக கூறியதற்கு, குஜராத்தில் மோர்பி தொங்கு பால விபத்தில் அவ்வளவு பேர் இறந்தும்; அந்தச் செய்தி ஒருநாள் தான் செய்தித்தாள்களில் இருந்தது என நிதிஷ்குமார் பதில் அளித்தார்.

Related Stories: