மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் அமைச்சர் திடீர் ஆய்வு: உரிய நேரத்தில் பணிக்கு வராத 4 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட்

செங்கல்பட்டு: மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிக்கு வராத 4 மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்ய அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும் மருத்துவமனையை ஆய்வு செய்யாமல் இருந்த மாவட்ட இணை இயக்குனரை பணியிடமாற்றம் செய்யவும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று ஒருநாள் பயணமாக திருவண்ணாமலை சென்று கொண்டிருந்தார். திருவண்ணாமலையில் பல்வேறு அரசு மருத்துவமனைகளின் புதிய கட்டிடங்களை அமைச்சர் திறந்துவைக்க உள்ளார்.

இந்நிலையில், சாலை மார்க்கமாக திருவண்ணாமலை நோக்கி சென்றுகொண்டிருந்த போது திடீரென செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் பொது மருத்துவர்கள் முறையாக பணிக்கு வராதது தெரியவந்தது. குறிப்பாக ஒருசில மருத்துவர்கள் கையொப்பமிட்டு பணிக்கு வராமல்  இருப்பது கண்டறியப்பட்டது.

உரிய நேரத்தில் பணிக்கு வராமல் இருந்த 4 மருத்துவர்கள் கண்டறியப்பட்ட நிலையில் அவர்கள் மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் மருத்துவமனையை ஆய்வு செய்யாமலிருந்த மாவட்ட மருத்துவ இணை இயக்குனரையும் தற்போது பணியிடமாற்றம் செய்ய அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: