செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் களிமண் இலவசமாக எடுக்க அனுமதி வழங்க வேண்டும்: அரசுக்கு மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை

சென்னை: செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் களிமண்ணை இலவசமாக எடுக்க அரசு  அனுமதி வழங்க வேண்டும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் குலாலர் சங்கம் சார்பில் சென்னை, நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் சேம.நாராயணன் தலைமை தாங்கினார். கணபதி, மகேஷ் கண்ணன், எஸ்.என்.பழனி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மண்பாண்ட தொழிலாளர் குலாலர் சங்க தலைவர் சேம.நாராயணன் பேசியதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புது அரிசியை புதுபானையில் பொங்கலிட ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசு மண் பானை மற்றும் மண் அடுப்பு இலவசமாக வழங்க வேண்டும். மண்பாண்ட தொழிலாளர்கள் தற்போது மிகவும் கஷ்டத்தில் உள்ளனர்.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் வசித்து வரும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு தேவையான களிமண்ணை இலவசமாக எடுக்க அரசு அனுமதி வழங்க வேண்டும். தமிழகத்தில் மண்பாண்ட தொழிற்பயிற்சி கல்லூரி ஒன்று உருவாக்கி தர வேணடும். 2023ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுக்கும்போது சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: