தியாகதுருகம் அருகே மணிமுக்தா ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 4 பேர், 8 மாடுகள் மீட்பு

தியாகதுருகம்: தியாகதுருகம் அடுத்த கண்டாச்சிமங்கலம் கிராமத்தில் ஆற்றின் நடுவே சிக்கிக் கொண்டவர்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த கண்டாச்சிமங்கலம் கிராமப்பகுதியில் நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் ராஜமாணிக்கம் (51), ராமலிங்கம் மகன் மகாலிங்கம் (48), பெருமாள் மகன் வீரமுத்து (57) மற்றும் வீரமுத்து மனைவி கொளஞ்சியம்மாள் (51) ஆகிய 4 பேரும் வயல்வெளிகளுக்கு ஓடை வழியாக கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றனர். ஒருபுறம் ஆற்றிலிருந்து பிரிந்து ஓடையாகவும், மற்றொருபுறத்தில் ஆற்றில் மணிமுக்தா அணையிலிருந்து அதிகளவு தண்ணீர் செல்வதால் நடுவில் மாட்டி கொண்டனர்.

மணிமுக்தா அணையிலிருந்து திடீரென தண்ணீர் திறந்து விடப்பட்டதால் வயல்வெளிக்கு சென்றவர்கள் மீண்டும் வீட்டுக்கு திரும்ப முடியவில்லை. பின்னர் வீரமுத்து தனது மகளிடம் செல்போனில் தொடர்பு கொண்டு ஆற்றில் தண்ணீர் அதிகம் வருவதாகவும் மாலையில் தண்ணீர் குறைந்தவுடன் நாங்கள் அனைவரும் வருகிறோம் என கூறியுள்ளார். ஆனால் தண்ணீரின் வேகம் குறையாத காரணத்தால் கால்நடைகளை கூட்டி கொண்டு ஆற்றை கடந்து வீடு திரும்ப முடியாமல் அந்த 4 பேரும் பல மணி நேரம் தவித்துள்ளனர்.

இதுகுறித்து வீரமுத்துவின் மகள் தகவல் கொடுத்ததையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்களும் விரைந்து வந்து உணவு பொட்டலங்களை கயிறு கட்டி கொண்டு சென்றனர். பின்னர் அவர்களுக்கு சொந்தமான கறவை மாடுகளை ஒன்றன்பின் ஒன்றாக கயிறு கட்டி இழுத்தனர். அப்போது திடீரென கனமழை பெய்தது. அதை பொருட்படுத்தாமல் 4 பேரையும் பாதுகாப்பு கவசத்தை உடுத்தி கரைக்கு அழைத்து வந்தனர். ஆற்றின் நடுவே சிக்கிய 4 பேர் உட்பட 8 மாடுகளையும் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேல் முயற்சி செய்து மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: