அருணாச்சல பிரதேச எல்லையில் சீன ஆக்கிரமிப்பு முயற்சி முறியடிப்பு: இந்திய வீரர்களுக்கு உயிர் சேதம் இல்லை; நாடாளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் விளக்கம்; கேள்வி கேட்க அனுமதிக்காததால் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

புதுடெல்லி: அருணாச்சல் பிரதேசத்தில் சீன வீரர்களின் ஆக்கிரமிப்பு முயற்சியை இந்திய ராணுவம் தைரியமாக முறியடித்ததாக நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார். இரு நாட்டு வீரர்கள் இடையேயான மோதலில், இந்திய தரப்பில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பதை அவர் உறுதிபடுத்தி உள்ளார். இதுதொடர்பாக கேள்வி கேட்க அனுமதி மறுக்கப்பட்டதால் மாநிலங்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். கடந்த 2020ம் ஆண்டு கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். சீன தரப்பில் 45 வீரர்கள் பலியானதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, இரு நாட்டு ராணுவமும், வெளியுறவுத்துறையும் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து எல்லையில் பதற்றம் தணிக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த 9ம் தேதி அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியில் மீண்டும் இரு நாட்டு வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டதாக ஒன்றிய அரசு நேற்று முன்தினம் தகவல் வெளியிட்டது. இதில் இந்திய தரப்பில் 6 வீரர்கள் காயமடைந்ததாகவும் அவர்கள் கவுகாத்தி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டது. இதன் காரணமாக மீண்டும் இந்திய, சீன எல்லையில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகவே சீன எல்லையில் என்ன நடக்கிறது என எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டு வரும் நிலையில், மோதல் சம்பவம் நடந்து 3 நாட்களுக்குப் பிறகு ஒன்றிய அரசு தகவல் வெளியிட்டது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் நேற்று புயலை கிளப்பியது. மக்களவை கூடியதும், எல்லை மோதல் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தவும், இதுதொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டுமெனவும் காங்கிரசின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கவுரவ் கோகாய், திமுகவின் டி.ஆர்.பாலு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் அசாதுதீன் ஓவைசி ஆகிய உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதன் காரணமாக அமளி ஏற்பட்டதால் அவை பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதே போல மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் விவாதம் நடத்த வலியுறுத்திய நிலையில் அவை பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் மக்களவை கூடியதும், எல்லை மோதல் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்க அறிக்கை வாசித்தார். அதில், ‘அருணாச்சலின் தவாங் செக்டாரின் யாங்சே பகுதியில் டிசம்பர் 9ம் தேதி சீன துருப்புகள் அசல் எல்லைக் கோட்டை (எல்ஏசி) மீறி ஒருதலைப்பட்சமான நிலையை மாற்ற முயன்றனர். சீனாவின் இந்த முயற்சியை இந்திய துருப்புகள் உறுதியான முறையில் எதிர்கொண்டனர். இதனால் ஏற்பட்ட மோதலில் இரு தரப்பிலும்  வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. நமது தரப்பில் உயிரிழப்புகளோ அல்லது கடுமையான காயங்கேளா ஏற்படவில்லை. இந்திய ராணுவ தளபதிகள் சரியான நேரத்தில் தலையிட்டதால், சீன வீரர்கள் அவர்களின் இருப்பிடங்களுக்கு திரும்பிச் சென்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து டிசம்பர் 11ம் தேதி இரு தரப்பு ராணுவ கூட்டம் நடத்தப்பட்டது. அதில் எல்லையில் அமைதியை நிலைநாட்டுமாறு இந்தியா கேட்டுள்ளது.

இந்த விவகாரம் தூதரக ரீதியாக அணுகப்பட்டு வருகிறது. எல்லையில் இந்திய வீரர்களின் துணிச்சலான இந்த முயற்சிக்கு ஆதரவாக இந்த முழு சபையும் ஒன்றுபட்டு நிற்கும் என நம்புகிறேன். எல்லையில் எந்த சூழலையும் சமாளிக்கும் திறனுடன் நமது ராணுவம் பலமாக உள்ளது’ என கூறி உள்ளார். இதே அறிக்கை மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, ராஜ்நாத் சிங்கின் விளக்கம் தொடர்பாக கேள்வி கேட்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவையின் அனுமதியை கோரின. ஆனால், இதுபோன்ற முக்கியமான விஷயங்களில் கேள்வி கேட்பதை அனுமதிக்க முடியாது என அவைத்தலைவர் ஹரிவன்ஷ் மறுத்து விட்டார். இதனால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷமிட்டபடி அவையிலிருந்து வெளிநடப்பு செய்தன. அவை நடைமுறைப்படி, அமைச்சரின் எந்தவொரு அறிக்கைக்கும் உறுப்பினர்கள் விளக்கம் பெற அனுமதிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

* விமானப்படை தீவிர கண்காணிப்பு

இந்திய, சீன வீரர்கள் மோதல் சம்பவத்தை தொடர்ந்து, தவாங் செக்டாரில் இந்திய விமானப்படை தனது கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது. ஏதேனும் பாதுகாப்பு அசம்பாவிதங்கள் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக போர் விமானங்களை அனுப்புவது உள்ளிட்ட தயார்நிலை நடைமுறைகள் பின்பற்றுவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

* இந்தியா மீது பழிபோடும் சீனா

டிசம்பர் 9ம் தேதி மோதல் தொடர்பாக பேசிய சீன ராணுவ செய்தித் தொடர்பாளர், ‘‘சீன எல்லையில் துருப்புகளின் வழக்கமான ரோந்துப் பணிகளைத் தடுக்க இந்திய துருப்புகள் சட்டவிரோதமாக எல்லை தாண்டின. எல்லையின் முன்கள பாதுகாப்பு வீரர்களை கண்டிப்பாக கட்டுப்படுத்த வேண்டும். மேலும் இரு நாட்டு எல்லையில் அமைதி, பாதுகாப்பை பராமரிக்க சீனாவுடன் இணைந்து செயல்பட இந்திய தரப்பை நாங்கள் வலியுறுத்துகிறோம்’’ என்றார். மோதலுக்கு பிந்தைய நிலவரம் குறித்து இந்திய ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் பி.சி. பொன்னப்பா நேற்று அளித்த பேட்டியில், ‘‘எல்லாம் நன்றாக உள்ளது. ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் அனைத்து வீரர்களும் பாதுகாப்பாக உள்ளனர்’’ என்றார்.

* ராஜிவ் அறக்கட்டளை குறித்து அமித்ஷா புகார்

அமளியைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்திற்கு வெளியே பேட்டி அளித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘‘ராஜிவ்காந்தி அறக்கட்டளை வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் விதிகளை மீறி செயல்பட்டது குறித்த கேள்விகளை தவிர்க்கவே எல்லைப் பிரச்னையை காங்கிரஸ் கிளப்புகிறது. ராஜிவ்காந்தி அறக்கட்டளை சீன தூதரகத்திடம் இருந்து ரூ.1.35 கோடி பணம் பெற்றுள்ளது. அதனால்தான் அதன் பதிவு ரத்து செய்யப்பட்டது. சீனாவின் மீது நேரு கொண்ட அன்பின் காரணமாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராகும் வாய்ப்பு தியாகம் செய்யப்பட்டது. இந்திய வீரர்களின் தியாகம் பாராட்டுக்குரியது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜ ஆட்சியில் இருக்கும் வரை, நம் நாட்டின் ஒரு அங்குல நிலத்தை கூட யாராலும் கைப்பற்ற முடியாது’’ என்றார். மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது, ராஜிவ்காந்தி அறக்கட்டளையின் சீன தொடர்பு மற்றும் ஜாகிர் நாயக்கின் நன்கொடை தொடர்பான கேள்வி பட்டியலிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

* அமித்ஷாவுக்கு காங். பதிலடி

அமித்ஷாவின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் தலைவர் பவன் கேரா நேற்று அளித்த பதிலடியில், ‘‘ராஜிவ்காந்தி அறக்கட்டளையின் கணக்குகள் பொது வெளியில் உள்ளன. அதில் மறைக்க எதுவும் இல்லை. ஆனால், சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஆர்எஸ்எஸ் தொடர்பு வைத்திருப்பது ஏன். அவர்கள் ஏன் சீன கட்சியுடன் கூட்டு சேர்கிறார்கள்? 2019 தேர்தலில் பாஜ ஏன் சீனாவின் யுசி நியூஸ் மொபைல் மற்றும் ஷேர்இட் ஆகியவற்றின் உதவியை பெற்றது? சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இல்லாத போதுகூட, அவர்களிடம் பாடம் கற்க பாஜ சென்றதே. இந்தியா அறக்கட்டளை மற்றும் விவேகானந்தா அறக்கட்டளைகளுக்கு சீனாவுடன் என்ன உறவு இருக்கிறது? பிஎம் கேர்ஸ் நிதியத்திற்கு எந்தெந்த சீன நிறுவனத்திடம் நன்கொடை பெற்றீர்கள்? அதன் விவரங்களை அரசு பகிரங்கமாக வெளியிட வேண்டும்’’ என்றார்.

Related Stories: