கார்த்திகை கடை ஞாயிறை முன்னிட்டு திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயில் காவிரி ஆற்றில் தீர்த்தவாரி உற்சவம்

திருவிடைமருதூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயில் நவக்கிரக தலங்களில் ராகு பகவானுக்குரியது. இக்கோயிலில் கடைஞாயிறு பெருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறுநாள் 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை தினமும் காலை, மாலை நேரங்களில் உற்சவ சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலாவும், 8ம் தேதி திருக்கல்யாண வைபவமும் நடந்தது. தொடர்ந்து 10ம் தேதி காலை 7.30 மணி முதல் 8.45 மணிக்குள் திருத்தேரோட்டம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கார்த்திகை கடை ஞாயிறு தீர்த்தவாரி நேற்று நடந்தது. இதையொட்டி காலை 10 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், தொடர்ந்து மதியம் 2 மணிக்கு சூரிய புஷ்கரணி திருக்குளத்தில் தீர்த்தவாரி வைபவமும் நடைபெற்றது. அப்போது மழை பெய்தபோதிலும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று (12ம் தேதி) விடையாற்றியும், இரவு புஷ்ப பல்லக்கில் வீதியுலாவும் நடைபெறுகிறது.

குத்தாலம்: கார்த்திகை மாத கடைசி ஞாயிற்றுகிழமையை முன்னிட்டு குத்தாலம் அரும்பன்ன முலையம்மன் சமேத உக்தவேதீஸ்வரர், ஸ்ரீமன்மதீஸ்வரர் ஆகிய ஆலயங்களில் இருந்து சுவாமி மற்றும் அம்பாள் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனம், வெள்ளி மயில்வாகனம், வெள்ளி மூஷிக வாகனம் ஆகியவற்றில் மங்கள வாதியங்கள் ஒலிக்க, வீதி உலாவாக காவிரி கரைக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

*4 மணி நேரம் வரிசையில் நின்று அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமமலையார் கோயிலில், பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா வெகு விமரிசையாக நடந்து முடிந்தது. கடந்த 6ம் தேதி 2,668 அடி உயர மலை மீது ஏற்றப்பட்ட மகாதீபம், தொடர்ந்து 6வது நாளாக நேற்றும் காட்சியளித்தது. கடந்த 2 நாட்களாக மாண்டஸ் புயல் மற்றும் கனமழையால் வெளியூர் பக்தர்களின் வருகை குறைந்திருந்தது. நேற்று மீண்டும் பக்தர்கள் வருகை பன்மடங்காக உயர்ந்தது.

எனவே, அண்ணாமலையார் கோயில் வெளி பிரகாரம் வரை தரிசன வரிசை நீண்டிருந்தது. பொது தரிசன வரிசையில் சுமார் 3 முதல் 4 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில பக்தர்களின் வருகையால், கோயில் மாடவீதிகளில் வாகனங்களை நிறுத்த இடமில்லாத அளவில் மாற்று இடங்களில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டன.

Related Stories: