பஞ்சாப் காவல்நிலையம் மீது ராக்கெட் குண்டுவீச்சு; போலீசார் உயிர் தப்பினர்

சண்டிகர்: பஞ்சாப்பில் காவல் நிலையம் மீது நேற்று  காலை  ராக்கெட் குண்டு வீசப்பட்டது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு  பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளது. பஞ்சாப்பில் எல்லையோர மாவட்டமான தார்ன்தரனில் உள்ள சர்ஹாளி காவல்நிலையம்  மீது நேற்று நள்ளிரவு ராக்கெட் குண்டு வீசி தாக்குதல்  நடத்தப்பட்டுள்ளது. சர்ஹாரி காவல்நிலையம் மற்றும் அதனுடன் உள்ள சான்ஜ்  கேந்திரா மீது  நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில்  மர்மநபர்கள் ராக்கெட்  குண்டை வீசியுள்ளனர். இந்த குண்டு  அங்குள்ள இரும்பு கேட்டின் மீது விழுந்து அருகில் இருந்த சான்ஸ் கேந்திரா  மீது விழுந்துள்ளது. இதில் அங்கிருந்த ஜன்னல்கள் சேதமடைந்தன.  இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து டி.ஜி.பி. உள்பட உயரதிகாரிகள் சம்பவ பகுதிக்கு விரைந்தனர். டி.ஜி.பி. கவுரவ் யாதவ் செய்தியாளர்களிடம்  கூறும்போது, ‘நெடுஞ்சாலையில் இருந்து காவல் நிலையம் மீது ராக்கெட் குண்டு வீச்சு தாக்குதல் நடந்துள்ளது. உபா சட்டத்தின் கீழ் எப்.ஐ.ஆர். பதிவாகி உள்ளது. ராணுவ படையும் விரைந்துள்ளது. தொழில்நுட்பம் மற்றும் தடய அறிவியல் அடிப்படையில் விசாரணை நடைபெறும். அதற்கேற்ப மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அதன்பின்னரே என்ன நடந்தது என்ற முடிவுக்கு வரமுடியும். ராக்கெட் லாஞ்சரை பறிமுதல் செய்துள்ளோம். முதல் கட்ட விசாரணையில், ராணுவம் சார்ந்த வெடிபொருள் பயன்பாடு தெரிய வந்துள்ளது. எல்லை கடந்த கடத்தல் விவகாரம் என தெரியவருகிறது. பாகிஸ்தான் நாட்டின் திட்டம் என தெளிவாக தெரிகிறது.

கடந்த ஒரு மாதத்தில் ஆளில்லா விமானங்கள்  மூலம் அனுப்பப்பட்ட ஏராளமான ஹெராயின், ஆயுதங்கள், வெடிமருந்துகள்  கைப்பற்றப்பட்டதையடுத்து, எதிரி நாடு பதற்றமடைந்து இரவில்  கோழைத்தனமான  தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த ஆண்டு மட்டும் 200 க்கும் மேற்பட்ட  டிரோன்கள் எல்லை தாண்டி வந்துள்ளன. அனைத்து கோணங்களிலும்  போலீசார் ஆய்வு  செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும்  சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மொகாலியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பஞ்சாப் உளவுத்துறை தலைமை அலுவலகம் மீது நடந்த தாக்குதல் போல் இந்த தாக்குதல் அமைந்துள்ளது. எனவே ஒன்றிய விசாரணை அமைப்புகள், எல்லை பாதுகாப்பு படையுடன் இணைந்து பஞ்சாப் போலீசார் விசாரணை நடத்துவார்கள். ‘ என கூறியுள்ளார்.

Related Stories: