திருச்செங்கோடு நகராட்சியில் செயல்படும் டீ கடை, உணவகங்களில் சுகாதார துறையினர் ஆய்வு

திருச்செங்கோடு : திருச்செங்கோடு நகராட்சி பகுதிகளில் செயல்படும் டீ கடைகள், உணவகங்களில் சுகாதாரதுறையினர் ஆய்வு நடத்தினர். திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட பகுதியில் செயல்படும் டீ கடைகள் மற்றும் உணவகங்களில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களில் சூடான டீ, காபி, குழம்பு போன்ற உணவு வகைகள் வைத்து பயன்படுத்தப்படுகின்றதா என, மாவட்ட கலெக்டர் மற்றும் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆகியோர் உத்தரவின் படி, நகராட்சி ஆணையர் கணேசன் அறிவுரையின்படி,  சுகாதார அலுவலர் வெங்கடாசலம் தலைமையில், சுகாதார ஆய்வாளர் குமரவேல் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் சோதனை நடத்தினர்.

அப்போது கடைகளில் வைக்கப்பட்டிருந்த மெட்டாலிக் கவர்களிலும், தற்போது போலியான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள்  வருவதை கண்டறிந்து, அதுபோன்ற போலியான கவர்களை பயன்படுத்த கூடாது என, டீக்கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சூடான பொருட்களை எந்தவொரு பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மெட்டாலிக் கவர்களில் பார்சல் தரக்கூடாது, பாத்திரங்களை பயன்படுத்தி பார்சல் தருமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர், கவர்களை பயன்படுத்தி சூடான பொருட்களை உணவாக உட்கொண்டால், புற்றுநோய் வரும் என கடைகளில் இருந்த பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் ஓட்டல்களுக்குள் சென்று, உணவுகள் தயாரிக்கும் சமையல் கூடம், பதப்படுத்தப்பட்ட கெட்டுப்போன உணவுகள் பயன்படுத்தப்படுகின்றதா என  சோதனையிட்டனர்.

அப்போது தனியார் ஓட்டல்களில், பழைய கோழி இறைச்சிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு  அவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும், கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களில் சூடான உணவுகளை பார்சலுக்கு பயன்படுத்திய டீக்கடைக்காரர்களுக்கு முதல் கட்டமாக ₹500அபராதம் விதிக்கப்பட்டது. மீண்டும் இதே நிலை தொடர்ந்தால், வரும் திங்கட்கிழமை முதல் கடைகளுக்கு ₹2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என, நகராட்சி அதிகாரிகள் கடுமையாக எச்சரித்தனர்.

Related Stories: