மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி மீனவ குப்பத்தில் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு: அமைச்சர் தா.மோ. அன்பரசன் தகவல்

சென்னை: மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி மீனவ குப்பத்தில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் தூண்டில் வளைவு அமைக்கப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார்.  மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் எதிரொலி காரணமாக ராட்சத அலை தாக்கி அம்மன் கோயிலின் சுவர் கடலில் அடித்து செல்லப்பட்டது. மாமல்லபுரம் அடுத்த இ.சி.ஆர்., சாலையொட்டி நெம்மேலி குப்பம் உள்ளது. இங்கு, 180க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு, தொடர்ந்து அடிக்கடி கடல் அரிப்பு ஏற்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாமலும், படகுகளை நிறுத்த இடம் இல்லாமலும் தவித்து வருகின்றனர்.

மேலும், இந்த குப்பத்தை ஒட்டி கடல்நீரை குடிநீராக்கும் ஆலை இருப்பதால், ஆலையை கடல் அலை தாக்காதவாறு கடலில் கற்களை கொட்டியுள்ளனர். இதனால், அருகில் உள்ள நெம்மேலி குப்பத்தை கடல் அலை ஆக்ரோஷமாக தாக்கிவருகிறது. இதனால் தான், தொடர்ந்து கடல் அரிப்பு ஏற்படுவதாக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். புயல் காரணமாக மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி மீனவ குப்பத்தில் ராட்சத அலைகள் தாக்கியதில் அம்மன் கோயிலின் முன்பக்க சுவர் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டது. மேலும், கோயிலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. தகவலறிந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் நேரில் வந்து பாதிப்பு குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அங்குள்ள பொதுமக்கள் அமைச்சர் முன்பு எங்கள் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, எங்களை பேரிடரில் இருந்து காப்பாற்றுங்கள் என கண்ணீர் மல்க கூறினர்.

அவர்களுக்கு அமைச்சர் ஆறுதல் கூறினார். பின்னர் அமைச்சர் தா.மோ. அன்பரசன் நிருபர்களிடம் கூறியதாவது, செங்கல்பட்டு மாவட்டத்தில் புயலால் எந்தவிதத்திலும் பொதுமக்கள் பாதிக்க கூடாது என்பதை கருத்தில் கொண்டு 290 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. மரங்கள் முறிந்து விழுந்தால் உடனடியாக மரம் அறுக்கும் கருவியை கொண்டு வெட்டி அப்புறப்படுத்த ஆட்களும் தயார் நிலையில் உள்ளனர். பூந்தமல்லியில் இருந்து தமிழ்நாடு தேசிய பேரிடர் மீட்பு குழு வீரர்கள் 120 பேர் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர். நெம்மேலி மீனவர் குப்பத்தில் தூண்டில் வளைவு அமைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Related Stories: