பள்ளி, அலுவலகம் செல்லும் நேரங்களில் குப்பை லாரிகளை இயக்க தடை கோரி வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

சென்னை: சென்னையில் பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் நெரிசலான நேரங்களில் குப்பை லாரிகளை இயக்க தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் வி.ஆனந்த் என்பவர் இந்த வழக்கை தொடர்ந்தார். அந்த மனுவில், பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் நேரங்களில் குப்பை லாரிகளை சாலைகளில் நிறுத்தி குப்பைகளை எடுப்பதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

குப்பைகள் மீது வலையை போர்த்தி செல்லாததால் காற்றில் அவை பறந்து சாலைகளில் கொட்டி, சுகாதார கேடு ஏற்படுகிறது. வெளிநாடுகளில் இரவு நேரங்களில் குப்பை லாரிகள் இயக்கப்படுவதைப் போல சென்னையிலும் இரவில் மட்டுமே குப்பை லாரிகளை இயக்கினால் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாது. எனவே, சென்னையில் பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் நேரங்களில் குப்பை லாரிகளை இயக்க மாநகராட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: