ரவுடிகளிடமிருந்து பறிமுதல் செய்த 34 நாட்டு வெடிகுண்டுகள் அழிப்பு: கொடுங்கையூரில் பரபரப்பு

பெரம்பூர்: சென்னை கொடுங்கையூர் குப்பைமேடு பகுதியில்  கடந்த 3ம் தேதி கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி காரில் சுற்றிதிரிந்த வியாசர்பாடி பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்ற வெள்ளை பிரகாஷ் (31), ரெட்கில்ஸ் பகுதியை சேர்ந்த விக்ரமாதித்தன் (37) ஆகியோரை மடக்கி பிடித்தனர். காரை சோதனை செய்தபோது அதில் 34 நாட்டு வெடிகுண்டுகள், கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தது.

இதையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த பாம் சரவணன் என்ற ரவுடியை கொலை செய்ய திட்டம் தீட்டியது தெரியவந்தது. இவர்களை பிடிக்க முயன்றபோது தப்பி ஓடியபோது கை, கால் உடைந்த நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 34 நாட்டு வெடிகுண்டுகளும் கொடுங்கையூர் குப்பை கிடங்கு பகுதியில் புதைத்து வைக்கப்பட்டது.  

இந்நிலையில் இன்று எம்கேபிநகர் உதவி கமிஷனர் தமிழ்வாணன் மேற்பார்வையில் கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட போலீசார், மருதம் கமாண்டோ வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து வெடிகுண்டுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அதனை யாருமில்லாத பகுதியில் வெடிக்க செய்து அப்புறப்படுத்தினர்.

இதுகுறித்து வெடிகுண்டு நிபுணர்கள் கூறுகையில், ‘பொட்டாசியம் நைட்ரேட், அலுமினிய பவுடர், வெள்ளை கல்லு, ஆணி பால்ஸ், சல்பர் உள்ளிட்ட பொருட்கள் மூலம் நாட்டு வெடிகுண்டு தயார் செய்யப்பட்டுள்ளது. பொதுஇடத்தில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்திருந்தால் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கும். இந்த வெடிகுண்டு பிற்காலத்தில்  யார் கையிலாவது  கிடைத்தால் தவறாக பயன்படுத்துவார்கள். இதை வெடிக்க செய்து அழிக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

Related Stories: