எலச்சிபாளையத்தை அடுத்த இலுப்புலி ஏரியில் படகு இல்லம் அமைக்க திட்டம்-சுற்றுலாத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு

நாமக்கல் : நாமக்கல் அருகே இலுப்புலி ஏரியில் படகு இல்லம் அமைக்க சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேரில் ஆய்வு செய்தார். ராசாம்பாளையத்தில் தமிழ்நாடு ஓட்டலை புதுப்பிக்க நடவடிக்கைநாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையத்தை அடுத்த இலுப்பிலி ஏரியில் படகு இல்லம் அமைப்பது குறித்து, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இலுப்பிலி ஏரியில் படகு இல்லம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும், படகு இல்லம் அமைக்க வசதியாக வாகன நிறுத்துமிடம், சிறுவர்களை கவரும் வகையில் பூங்கா ஆகியவை அமைக்க தேவையான இடம் உள்ளதா என அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.அதைத்தொடர்ந்து, நாமக்கல்லை அடுத்த ராசம்பாளையத்தில் உள்ள தமிழ்நாடு ஓட்டலை புதுப்பித்து, உணவகம் அமைப்பது குறித்து, அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர் மதிவேந்தன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் உத்தரவுப்படி, சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தி சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஒரு நாள் சுற்றுலா, கலாசார சுற்றுலா, ஆன்மிக சுற்றுலா, கல்வி சுற்றுலா போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பெரிதும் அறியப்படாத சுற்றுலாத்தலங்கள் மேம்படுத்தப்படுகிறது. இலுப்பிலியில் 160 ஏக்கரில் அமைந்துள்ள ஏரியில், படகு இல்லம் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஏரியில் கடந்த 7 ஆண்டுகளாக வெயில் காலங்களிலும் வற்றாத நிலையில் நீர் இருப்பு இருந்து வருகிறது.

திருச்செங்கோடு பகுதியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் சுற்றுலா தலம் இல்லை. எனவே இந்த ஏரியில் பல்வேறு அம்சங்களுடன் கூடிய படகு இல்லம் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சாத்திய கூறுகள் இருப்பின் அடுத்த நிதியாண்டில் படகு இல்லம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கொல்லிமலையில் சுற்றுலா தலத்தை மேம்படுத்தும் வகையில்,  சுமார் 14 ஏக்கரில் சூழல் சுற்றுலா நிறுவப்பட உள்ளது. அங்கு சாகச சுற்றுலா அமைக்கவும், மேம்படுத்தப்பட்ட சுற்றுலா தலம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக ₹3கோடி அரசு ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் இன்னும் 6 மாதத்தில் நிறைவடைந்து கொல்லிமலையில் சுற்றுலா பயணிகளுக்கு இந்த வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.

தமிழகத்தில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ராசாபாளையம் பகுதியில் தமிழ்நாடு ஹோட்டல் கட்டடம் உள்ளது. இந்த ஓட்டலில் குழந்தைகளுக்கான பூங்கா மற்றும் இதர வசதிகளுடன் புதுப்பிப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இரண்டு ஏக்கர் நிலம் கொண்ட இந்த பகுதியில், தேசிய நெடுஞ்சாலை ஒரு ஏக்கர் நிலம் எடுத்துக் கொண்டதால், தற்போது ஒரு ஏக்கர் பரப்பில் ஓட்டல் இருக்கிறது.இதர வசதிகளுடன் புதுப்பித்து உணவகத்துடன் ஓட்டல் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.ஆய்வின் போது நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் மஞ்சுளா, மாவட்ட சுற்றுலா அலுவலர் அபராஜதின், தாசில்தார்கள் சக்திவேல், அப்பன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: