மாண்டஸ் புயலால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை!: 3,817 பாசனக் குளங்கள் முழு கொள்ளளவை எட்டி 100% நிரம்பின..!!

சென்னை: தமிழ்நாட்டில் 3,817 பாசனக் குளங்கள் முழு கொள்ளளவை எட்டி 100 சதவீதம் நிரம்பியுள்ளன. வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் இரவு தீவிர புயலாக மாறியது. இதனால் நாகை, கடலூர், காரைக்கால் துறைமுகங்களில் 5ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை (நுங்கம்பாக்கம், மாதவரம்) 7 செ.மீ.மழை பெய்துள்ளது. பெரம்பூர், புழலில் தலா 6 செ.மீ., சென்னை எம்.ஜி.ஆர். நகர், அயனாவரம், தரமணியில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு அணைகள், பாசன குளங்களில் நீர் நிரம்பி வழிகின்றன. அந்த வகையில்,

* தமிழ்நாட்டில் 3,817 பாசனக் குளங்கள் முழு கொள்ளளவை எட்டி 100 சதவீதம் நிரம்பியுள்ளன.

* தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,340 பாசனக் குளங்களில் 820 குளங்கள் நிரம்பின.

* தஞ்சை மாவட்டத்தில் உள்ள 641 பாசனக் குளங்களில் 399 குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளன.

* செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தமுள்ள 564 பாசனக் குளங்களில் 212 குளங்கள் நிரம்பின.

* சிவகங்கை 205, திருவண்ணாமலை 307, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை தலா 174, திருவள்ளூர் 181 குளங்கள் நிரம்பின.

* காஞ்சி 110, கள்ளக்குறிச்சி 93, விழுப்புரம் 89, கிருஷ்ணகிரி 78, தென்காசி 220, ஈரோடு 14, குமரி 25 குளங்கள் நிரம்பியுள்ளன.

Related Stories: