மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை எச்சரிக்கை: சென்னை, காஞ்சி, திருப்பத்தூர் உள்பட 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு..!!

சென்னை:  மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை எச்சரிக்கையாக 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், வேலூர், திருப்பத்தூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நள்ளிரவு முதல் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் தற்போது தீவிர புயலாக மாறி வருகிறது.  

சென்னைக்கு தென் கிழக்கே 550 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் சுற்றுவட்டாரத்திலும் காலை முதல் மழை பெய்து வருகிறது. இதனிடையே மாண்டஸ் புயலை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் உடன் தலைமை செயலாளர் வெ. இறையன்பு மீண்டும் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் காவல்துறை, தீயணைப்புத்துறை, பேரிடர் மீட்புப் படை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய இறையன்பு, மாண்டஸ் புயல் எச்சரிக்கையால் அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டார். மேலும் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்குமாறு ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி, தற்போது, மாண்டஸ் புயல் நெருங்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:

அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், மிதமானது வரையில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, கரூர், சேலம், திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல், தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 22 மாவட்டங்களில், அடுத்த 2 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்திருக்கிறது.

Related Stories: