முதல்வராக பொறுப்பேற்ற பின்பு முதன் முறையாக மு.க.ஸ்டாலின் தென்காசிக்கு ரயில் பயணம்: பொதிகை எக்ஸ்பிரசில் சென்னையில் இருந்து புறப்பட்டார்

சென்னை: முதல்வராக பொறுப்பேற்ற பின்பு முதன் முறையாக மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தென்காசிக்கு ரயில் பயணம் மேற்கொண்டார். இதற்காக பொதிகை எக்ஸ்பிரசில் நேற்றிரவு புறப்பட்டு சென்றார். தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் முறையாக தென்காசி மாவட்டத்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். வழக்கமாக வெளியூர் பயணங்கள் என்றால்  விமானம், கார் என பயணிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், முதல் முறையாக ரயிலில் தென்காசிக்கு சென்றார். அவரது இந்த ரயில் பயணம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் திமுக தலைவராக இருந்த கலைஞர், ரயில் பயணங்களை அதிகம் விரும்புவார். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு கட்சி ரீதியாக செல்லும் சுற்று பயணங்களாக இருந்தாலும் சரி, முதல்வராக இருந்த போது அரசு பயணமாக சென்றாலும் சரி, ரயிலில் செல்வதையே அதிகம் விரும்புவார். அதற்கு காரணம், மக்களோடு மக்களாக பயணம் செய்தால்தான் அவர்களோடு ஒரு பாசப் பினைப்பு இருக்கும் என்று கலைஞர் குறிப்பிடுவார். இப்போது, அவரது வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரயில் பயணத்தை தேர்வு செய்திருப்பது திமுக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை வரவழைத்துள்ளது.

தென்காசியில் இன்று நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னை எழும்பூரில் இருந்து நேற்றிரவு 8.40 மணிக்கு பொதிகை ரயிலில் புறப்பட்டு சென்றார். இதற்காக நேற்றிரவு 8.05 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டார். எழும்பூர் ரயில் நிலையம் வந்தடைந்த அவருக்கு ரயில் நிலையத்தின் உட்புறமும், வெளிப்புறமும் திரண்டு நின்றிருந்த திமுகவினர் முதல்வருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். 8.40 மணிக்கு ரயில் புறப்பட்டது.

அவரை திரளான கட்சியினர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் வழி அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு கை அசைத்தவாறு தென்காசி புறப்பட்டு சென்றார். வழியில் ரயில் நிற்கும் நிலையங்களில் தொண்டர்கள் முதல்வருக்கு உற்சாக வரவேற்பளித்தனர் .இன்று காலை 7.30 மணிக்கு தென்காசி சென்றடைகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தென்காசி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்படுகிறது. அதை தொடர்ந்து, குற்றாலத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். அதன் பிறகு விழாவில் பங்கேற்கிறார். மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு  முதன் முறையாக தென்காசி மாவட்டத்துக்கு செல்வது குறிப்பிடத்தக்கது.

Related Stories: