தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் விரிவாக்கத்திற்காக பட்டா நிலங்களை பரிமாற்றம் செய்ய தடை கோரி வழக்கு: அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்களது திட்டங்களை விரிவுபடுத்த, அரசு புறம்போக்கு நிலத்தைக் கொடுத்து, பதிலுக்கு பட்டா நிலங்களை அரசுக்கு பரிமாற்றம் செய்து கொள்ள அனுமதித்து கடந்த மே மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை எதிர்த்து புதுச்சேரியைச் சேர்ந்த சூர்யா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தமிழக அரசின் இந்த அரசாணை, அரசு புறம்போக்கு நிலங்கள், சிறிய நீர்நிலைகளை ஆக்கிரமிக்க வழிவகை செய்கிறது. அரசு நிலத்தை தனியார் நிறுவனங்களுக்கு பரிமாற்றம் செய்ய அனுமதிப்பது நீர்நிலைகளுக்கு மட்டுமல்லாமல், நீர்நிலைகளை இணைக்கும் கால்வாய், ஓடைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

அதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விடும். எனவே, இந்த அரசாணையின் அடிப்படையில் நில பரிமாற்றத்துக்கு தடை விதிக்க வேண்டும். அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு நிலம் பரிமாற்றம் செய்வது தொடர்பான அரசாணையில் நீர்நிலைகளை பாதுகாக்கும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: