2023-2024-ம் ஆண்டு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் பட்டய வகுப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2023-2024 ஆம் ஆண்டிற்கான ஓராண்டு கல்வெட்டியல் மற்றும் தொல்லியல், அகழாய்வுக்கான பட்டய வகுப்பு 2023 ஜனவரி-31 திங்கள் அன்று முதல் தொடங்கப்பட உள்ளது. இவ்வகுப்பில் கல்வெட்டியல், தொல்லியல் வழி தமிழக வரலாறு, மொழி, பண்பாடு, கலை, இலக்கியம் குறித்து அறிந்து கொள்வதற்கும், கல்வெட்டுப் படியெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்தலுக்கான பயிற்சியும் அளிக்கப்படும்.

இதில் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பட்டய வகுப்பு வார விடுமுறை நாளான ஞாயிறுதோறும் (முழு நாள்) நேரடியாக ஓராண்டுக் காலம் நடைபெறும். இப்பட்டய வகுப்பிற்கான விண்ணப்பத்தினை நிறுவன வலைதளத்தில் (www.ulakaththamizh.in ) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.  இவ்வகுப்புக்கான குறைந்தபட்சக் கல்வித் தகுதி பத்தாம் வகுப்புத் தேர்ச்சி. வயதுவரம்பு கிடையாது. சேர்க்கைக் கட்டணம் ரூ.3000/- ஆகும்.

சேர்க்கைக் கட்டணம் “இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்” (The DIRECTOR, International Institute of Tamil Studies) எனும் பெயரில் வங்கி வரைவோலையாகவோ அல்லது நிறுவன வங்கிக் கணக்கில் இணையம் வழியாகவோ செலுத்தி, செலுத்தப்பட்டமைக்கான இரசீதினை நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பப்பட வேண்டும்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2022 டிசம்பர் 31ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் நிறுவன முகவரிக்கு (இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை - 600 113 என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

வகுப்புகள் தொடங்கப்பெறும் நாள், நேரம் போன்ற விவரங்கள் நிறுவன வலைதளத்தில் பின்னர் வெளியிடப்படும் என்றும் மேலும் தகவல்களுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 044-22542992, 9500012272 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories: