சாலை விபத்தில் சிக்கியவரின் கண்ணிலிருந்து 10 செ.மீ மரத்துண்டு அகற்றம்: ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை

சென்னை: வண்டலூர் பகுதியில் வசிக்கும் முல்லை வேந்தன் என்ற 33 வயது நபர் கடந்த வாரம் சாலை விபத்துக்குள்ளாகி, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக எழும்பூர் அரசினர் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டன. இந்நிலையில் அவருக்கு கண்ணில் பார்வைக்  குறைபாடு மற்றும் இரட்டை பார்வை இருந்தது பரிசோதனையின் மூலம் தெரியவந்தது.

மேலும் அவருக்கு எடுக்கப்பட்ட ஸ்கேனில் இடது கண்ணில் மரத்துண்டு கண் நரம்பை அழுத்திக் கொண்டு இருப்பதும் தெரிய வந்தது. கண் மருத்துவமனையில் இருந்து காது, மூக்கு, தொண்டை நிபுணரின் கருத்தை பெற பரிந்துரைக்கப்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கண்ணில் உள்ள மரத்துண்டை மூக்கின் வழியாக என்டோஸ்கோப்பி மூலம் அகற்ற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அவர் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது பார்வை பாதிக்கப்படாமல் அறுவை சிகிச்சை செய்வது என்பது மிகவும் சிக்கலானது.

இந்நிலையில் மருத்துவ கல்லூரி முதல்வர் தேரணி ராஜன் வழிகாட்டுதல்படி, 6 மருத்துவர்கள் கொண்ட குழுவால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சுமார் 10 செ.மீ. அளவுள்ள மரத்துண்டு கண்ணிலிருந்து அகற்றப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு அவருடைய பார்வைக் குறைப்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற அறுவை சிகிச்சைகள் அரசு மருத்துவமனையில்  செய்யப்படும் என மருத்துவர்கள் நிரூபித்துள்ளனர். மேலும் தக்க நேரத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால் பார்வை இழப்பு தவிர்க்கப்பட்டது. இதற்கு தனியார் மருத்துவமனையில் பல லட்சங்கள் செலவாகும்.

Related Stories: