ஆசிரியர்கள் நியமனத்தை இயக்கமாக மேற்கொள்ள வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கல்வி கற்பிப்பதன் நோக்கம் கற்றல் திறன் குறைவாக இருப்பவர்களையும் கல்வியில் சிறந்தவர்களாக முன்னேற்றுவது தான். இயல்பாகவே கற்றல் திறன் அதிகமாக உள்ள மாணவர்கள் நன்றாக படித்து முன்னேறுகின்றனர். பள்ளிகள் அவர்களுக்கானவை அல்ல. 10% மதிப்பெண் எடுக்கத் தடுமாறும் மாணவர்களை 60% எடுக்கும் நிலைக்கு முன்னேற்றுவதும், 50% மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை 90%க்கும் கூடுதலான மதிப்பெண்களை எடுக்கும் நிலைக்கு உயர்த்துவதும் தான் அரசு பள்ளிகளின் நோக்கமாக இருக்க வேண்டும்.

மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்க தமிழக அரசின் சார்பில் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், அவை மட்டுமே போதாது. அரசு பள்ளிகளின் கட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலமே மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த முடியும். அதைக் கருத்தில் கொண்டு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மட்டுமின்றி, வகுப்புக்கு ஓர் ஆசிரியர் வீதம் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ஆசிரியர்கள் நியமனத்தை ஓர் இயக்கமாக கருதி மேற்கொள்ள தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.

Related Stories: