மாமல்லபுரம் மீனவர் குப்பம் சாலையில் கழிவுநீரை அகற்ற கோரிக்கை

மாமல்லபுரம்: மாமல்லபுரம் மீனவர் குப்பத்தில் சாலையில் வழிந்தோடும் பாதாள சாக்கடை கழிவுநீரை பேரூராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். மாமல்லபுரம் மீனவர் குப்பத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள ஒத்தவாடை தெருவில் ஓட்டல், ரெஸ்டாரன்ட், தங்கும் விடுதிகள், சிலை விற்பனை கடைகள் உள்ளன. இந்நிலையில், கடற்கரைக்கு 50 மீட்டருக்கு முன்பு பாதாள சாக்கடையில் 2 இடங்களில் மேனுவல் மூடியில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் வழிந்து ஓடுகிறது. இதன்காரணமாக, கடை வைத்திருப்பவர்களும், ஓட்டல்கள் வைத்திருப்பவர்கள், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

சாலையில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மூக்கை மூடியபடி கடந்து செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கழிவுநீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகியுள்ளதால், இரவில் வீடுகளில் தூங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கழிவுநீர் தேக்கத்தால் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, மாமல்லபுரம் மீனவர் குப்பத்தில் ஒத்தவாடை தெருவில் வழிந்தோடும் பாதாள சாக்கடை கழிவுநீரை அப்புறப்படுத்த பேரூராட்சி அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: