கடலூர் மாநகராட்சி பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரால் மக்கள் கடும் அவதி-பாம்புகள் நடமாட்டம் அதிகரிப்பு

கடலூர் : கடலூர் அனைத்து குடியிருப்போர் சங்க கூட்டமைப்பு  நிர்வாகி புருஷோத்தமன் மற்றும் எம்ஜிகே நகர் குடியிருப்பு வாசிகள் தமிழக முதல்வர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:கடலூர் மாநகராட்சி வில்வநகர் வீட்டு வசதி வாரியம் பின்புறம் பார்வையிழந்தோர் பள்ளி அருகே உள்ள பெருமாள் குளம் எதிரில் உள்ள எம்ஜிகே நகரில் கடந்த ஒருவார காலமாக மழைநீர் தேங்கி உள்ளது.

 இங்கு தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற மோட்டார் பம்ப் மூலம் மழைநீரை வெளியேற்ற கடலூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இந்த பகுதியில் மூன்று மோட்டார் பம்ப் மூலம் மழைநீரை வெளியேற்றி வந்தார்கள். ஆனால் பத்து தினங்களுக்கு முன்பு யாருக்கும் தெரியாமல் இந்த மோட்டார்கள் மூன்றையும் எடுத்து சென்று விட்ட காரணத்தினால் இந்த பகுதியில் மீண்டும் சாலைகளில், வீடுகளில் மழைநீர் புகுந்து விட்டது. அருகில் உள்ள பெருமாள் குளம் நிரம்பி வழிந்தால் அதை சுற்றியுள்ள பகுதியில் குடியிருக்கும் மக்கள் அன்றாடம் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.இது தொடர்பாக கடலூர் மாநகராட்சி ஆணையருக்கு முறையிட்டு மழைநீரை வெளியேற்ற மோட்டார் பம்ப் பொருத்த கோரியிருந்தோம்.

கடலூரில் தொடர்மழை காரணமாக மேலும் மழைநீர் வீடுகளை சுற்றி நிற்கிறது. சாலைகள் முழுவதும் குளம் போல காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக விஷ ஜந்துக்கள், பாம்புகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அரசு செயலாளர் நகராட்சி நிர்வாகம் மற்றும் இயக்குனர் நகராட்சி நிர்வாகம் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை யாரும் மழைநீரை வெளியேற்ற முன்வரவில்லை.

தமிழக முதல்வர் இந்த பகுதியில் உள்ள மக்கள் நலன் கருதி போர்க்கால அடிப்படையில் மூன்று மோட்டார் பம்ப்புகள் வைத்து இங்கு தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: