பிரதமர் என்றால் தேர்தல் விதிமுறைகளை மீறலாமா?.. குஜராத் தேர்தலில் வாக்களிக்க பேரணியாக நடந்து சென்றது குறித்து மம்தா பானர்ஜி கேள்வி

கொல்கத்தா: பிரதமர் மோடி இன்று நடைபெற்ற குஜராத் தேர்தலில் வாக்களிக்க பேரணியாக நடந்து சென்றது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள குஜராத் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அங்குள்ள 182 சட்டசபை தொகுதிகளில் முதற்கட்டமாக 89 இடங்களுக்கு கடந்த 1ம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது. முதல்கட்ட தேர்தலில் 63.30 சதவீத வாக்குகள் பதிவானது. 2வது மற்றும் இறுதிக்கட்டமாக 14 மாவட்டங்களில் உள்ள 93 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது. முதல்வர் பூபேந்திர பட்டேல், 285 சுயேட்சைகள் உள்பட 832 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

தேர்தல் நடந்த 93 தொகுதிகளில் பா.ஜ, ஆம் ஆத்மி தலா 93 தொகுதிகளிலும், காங்கிரஸ் 90  தொகுதிகளிலும், கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் 2 தொகுதிகளிலும்,  பாரதீய பழங்குடியின கட்சி 12 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 44  தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. 14,975 பூத்களில் மக்கள் வரிசையாக நின்று ஓட்டு போட்டனர். அகமதாபாத்தில் உள்ள ராணிப் பகுதியில் உள் நிஸ்ஹான் உயர்நிலைபள்ளியில் பிரதமர் மோடி ஓட்டு போட்டார்.  அப்போது வாக்களிக்கச் சென்ற பிரதமர் மோடி இரண்டரை மணி நேரம் சாலை பேரணியாக சென்று வாக்கு செலுத்தினார். தேர்தல் நடைபெறும் நாளில் எந்த பிரச்சாரமும், பேரணியும் மேற்கொள்ளக்கூடாது என விதிமுறைகள் இருக்கிறது.

தற்போது இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்கட்சிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, ஜி-20 மாநாட்டுக்கு செல்வதற்கு முன்பு செய்தியளர்களிடம் பிரதமரின் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அவர், பிரதமர் என்றால் தேர்தல் விதியை மீறலாமா? வாக்குப்பதிவு நாளன்று பேரணிகளுக்கு அனுமதியில்லை என்பது விதி. ஆனால் பிரதமரும், பாஜகவினரும் விவிஐபிகள். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவர்களுக்கு மன்னிப்பு கிடைத்துவிடும் என்று விமர்சித்துள்ளார்.

Related Stories: