வரிசையில் நிற்பதில் மோதலை தடுத்த பெண் காவலரை தாக்கிய புழல் சிறை பெண் கைதிகள்: போலீசார் விசாரணை

புழல்: புழல் மத்திய சிறையில் நேற்று முன்தினம்  பெண் சிறைக் காவலர் ஒருவர், பெண் கைதிகளால் சரமாரியாக தாக்கப்பட்டார். இதுதொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் போலீசார் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புழல் மத்திய சிறையில் உள்ள  மகளிர் பிரிவில் 150க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் சிறை வளாகத்துக்குள் கைதிகளுக்கு உணவு வழங்கும் பணி நடந்தது. அப்போது விசாரணை கைதிகளான இலங்கையை சேர்ந்த மேரி பிரான்சிஸ்கோ (36), தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த சினோ தாண்டா மாம்பிசோ (30) என்ற 2 பெண் கைதிகளுக்கு இடையே வரிசையில் நிற்பது தொடர்பாக வாய்த்தகராறு ஏற்பட்டது. சினோவுக்கு ஆதரவாக நைஜீரியாவை சேர்ந்த ஆண்டனி மோனிகா (30) என்ற பெண்ணும் சேர்ந்து  வாய்த்தகராறில் ஈடுபட்டார்.

பின்னர் அங்கிருந்த சிறைக் கதவை சினோவும் மோனிகாவும் எட்டி உதைத்துள்ளனர். இதை பார்த்த அங்கு பணியில் இருந்த முதல்நிலை பெண் சிறைக் காவலர் கோமளா (45) இவர்களை  தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த  2 பெண் கைதிகளும் கோமளாவை சரமாரியாக அடித்து, உதைத்து கீழே தள்ளினர். இதில், படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே மயங்கி சரிந்தார். அவரை சக காவலர்கள் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று, நேற்று முன்தினம் இரவு பெண் காவலர் கோமளா வீடு திரும்பினார். புகாரின் பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட 2 பெண் கைதிகளிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் போலீசார் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: