காற்றழுத்தம் தாழ்வழுத்த பகுதியாக உருவானது நாளை முதல் கன மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: அந்தமான் அருகே உருவான காற்றழுத்தம், தற்போது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இது மேலும் வலுப்பெற்று தமிழகத்தை நெருங்கி வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், 7ம் தேதி முதல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அக்டோபர் மாதம் தொடங்க வேண்டிய வடகிழக்கு பருவமழை சற்று தாமதமாக நவம்பர் மாதம் தொடங்கியது. அக்டோபர் முதல் இதுவரை பெய்த மழை அளவு, தமிழகத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய மழையைவிட 3% குறைவு. இருப்பினும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

அதன்படி, தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வடதமிழகத்தில் அனேக இடங்களிலும்  மழை பெய்துள்ளது. அதில் அதிகபட்சமாக தஞ்சாவூர், திருநெல்வேலி 160 மிமீ மழை பெய்துள்ளது. நீடாமங்கலம் 140மிமீ, மாஞ்சோலை 130மிமீ, கீழ அணைக்கட்டு 120 மிமீ, நன்னிலம், வலங்கைமான், குலசேகரப்பட்டினம் 110 மிமீ, திருவையாறு 100 மிமீ, கும்பகோணம், மணல்மேடு, அறந்தாங்கி, மன்னார்குடி, மஞ்சளாறு, ஜெயங்கொண்டம், கொடவாசல் 90 மிமீ, பான்வையார், திருவாரூர், கொள்ளிடம், திருமானூர், சீர்காழி 80மிமீ மழை பெய்துள்ளது.

இந்நிலையில், அந்தமான் அருகே உருவான காற்றழுத்தம் தற்போது, காற்றழுத்த  தாழ்வுப்பகுதியாக உருவாகியுள்ளது. இது, மேற்கு -வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை(6ம்தேதி) தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். பிறகு மேலும் நகர்ந்து மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து  புயலாக மாறும். 8ம் தேதி காலை வடதமிழகம், புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிக்கு வரும் அதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களிலும், தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

மேலும், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். 8ம் தேதியை பொறுத்தவரையில் கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யும். ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யும். ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

9ம் தேதி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு , விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். மேலும், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர் பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், கரூர், ஈரோடு, மாவட்டங்களில் கனமழை பெய்யும். மேற்கண்ட வங்கக் கடலின் நிகழ்வு காரணமாக இன்று முதல் 9ம் தேதி வரை தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகள், தமிழகம் புதுவை அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 60 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

Related Stories: