திருத்தணி முருகன் மலைக்கோயிலில் மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிகள் தரிசிக்க தனிவழி ஏற்படுத்தப்படுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் கிருத்திகை, திருப்படி திருவிழா, கார்த்திகை தீபத் திருவிழா, சித்தரை மாசி பிரமோற்சவம் மற்றும் கந்தசஷ்டி, நவராத்திரி உள்ளிட்ட விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், விரதம் இருந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். ஆடி கிருத்திகை விழாவுக்கு தமிழகம் முழுவதும் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இவ்வாறு தரிசனத்துக்கு மாற்றுத் திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் வருகின்றனர். மேலும் வேண்டுதல் மூலம் குழந்தை பிறந்தால் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கைக் குழந்தையுடன் பெண்கள் வருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் பெரும்பாலானவர்கள், படிக்கட்டு வழியாக நடந்து செல்கின்றனர்.

வசதி படைத்தவர்கள், கார்களில் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். தரிசனம் செய்வதற்கு கோயில் சார்பில் 100 ரூபாய் தரிசனம் மற்றும் இலவச தரிசன டிக்கெட் உள்ளது. இந்த நிலையில் கைக் குழந்தைகளுடன் வரும் பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியோர்கள் ஆகியோர் தரிசனம் செய்வதற்கு சிரமப்படுகின்றனர். எனவே, இவர்களின் வசதிக்காக எளிதாக வந்துசெல்லும் வகையில் தனி வழி அமைக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பக்தர்கள் கூறுகையில், ‘’திருத்தணி கோயிலுக்கு வரும் மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணி பெண்களுக்கு வசதியாக தனி வழி ஏற்படுத்தவேண்டும். கோயிலுக்கு வரும் வருமானத்தின் மூலம் இந்த பணிகளை செய்யலாம். எனவே, இதில் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றனர்.

Related Stories: