கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர்கள் 2 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை

சென்னை: கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆபரேஷன் செய்த 2 மருத்துவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம்  எம்.எம் கார்டன் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி ரவி மற்றும் உஷா தம்பதியரின் மகள் பிரியா (17). இவர், ராணி மேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்ததுடன், கால்பந்தாட்ட வீராங்கனையாகவும் இருந்தார். இந்நிலையில், 3 மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்ற பிரியாவுக்கு முழங்காலில் வலி ஏற்பட்டது. இதனால், அக்டோபர் 28ம்தேதி அவர் பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து பிரியாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சோமசுந்தரம், பால் ராம்சங்கர் ஆகியோர் அவருக்கு கால் மூட்டு பகுதியில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தனர். பிரியா மற்றும் பெற்றோர் ஆபரேஷனுக்கு சம்மதம் தெரிவித்த நிலையில், பிரியாவுக்கு 2 மருத்துவர்களும் கால்மூட்டு பகுதியில் அறுவை சிகிச்சை செய்தனர்.

ஆனால், எதிர்பாராத விதமாக, ஆபரேஷனுக்கு பின்னர் பிரியாவின் உடல்நிலை மோசமடைந்தது. இதனால், கடந்த மாதம் 8ம்தேதி மேல் சிகிச்சை பெற ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். எனினும், பிரியாவுக்கு காலில் ரத்த ஓட்டம் தடைபட்டதால், அவரது முழங்கால் பகுதி வரை ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டது. தொடர் சிகிச்சையில் இருந்து வந்த பிரியா உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 14ம் தேதி உயிரிழந்தார். இச்சம்பவம், தொடர்பாக பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனை மருத்துவர்களான சோமசுந்தரம் மற்றும் பால் ராம்சங்கர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்தும் துறை ரீதியிலான நடவடிக்கையும் எடுக்கப்பட்டது அதுமட்டுமல்லாமல் பிரியா மரணம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள மருத்துவர் குழு அமைக்கப்பட்டது. இதற்கிடையே பெரவள்ளூர் காவல் நிலையத்தில் பிரியாவின் தந்தை ரவி  அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்தனர். மேலும் பிரியாவின் மரணம் தொடர்பாக 12 விதமான கேள்விகளை கேட்டு பெரவள்ளூர் காவல்துறையினர்  மருத்துவ கல்வி இயக்குனரகத்துக்கு கடிதம் அனுப்பினர்.

இந்நிலையில், பிரியா மரணம் நிகழ்ந்தது தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குனரகம் காவல்துறையிடம்  அறிக்கையை சமர்பித்துள்ளது. இந்த அறிக்கையில் மருத்துவர்கள் பால்ராம், சோமசுந்தரம், மயக்க மருந்து செலுத்திய மருத்துவர்,  மருத்துவ அதிகாரி (அறுவை சிகிச்சை நடைபெறும்போது இருந்தவர்), எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், வார்டு பணியாளர் ஆகியோரின் கவனக்குறைவு காரணமாகவே பிரியா மரணம் நிகழ்ந்துள்ளது என அறிக்கையின் மூலம் உறுதி செய்யபட்டது. இதனையடுத்து, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 2 மருத்துவர்கள் உட்பட 5க்கும் மேற்பட்டோர் மீது பெரவள்ளூர் போலீசார் கவனக்குறைவாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், பிரியா மரணம் தொடர்பாக போலீசாரால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மருத்துவர் குழு அளித்த விளக்கத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகவும், அதனால் தொடர்ந்து மருத்து குழுவினரிடம் போலீசார் தரப்பில் இருந்து மேலும் சில கேள்விகளை கேட்டுள்ளதாகவும் அதற்கு விளக்கம் பெற வேண்டிய உள்ளதாகவும் போலீசார் கூறினர். இந்நிலையில், மருத்துவர்களை கைது செய்யக்கூடாது, அவர்களிடம் முறையான விளக்கம் பெற வேண்டும் என மருத்துவர் சங்கத்தினர் தொடர்ந்து தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.

இந்நிலையில் நேற்று ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் பால்ராம் சங்கர் மற்றும் சோமசுந்தரம் ஆகிய 2 மருத்துவர்கள் இடமும் தனித்தனியாக விசாரணை குழு மற்றும் போலீசார் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணையில், மாணவி பிரியா சிகிச்சைக்கு கொண்டு வந்தது முதல், இறப்பு வரை என்னென்ன சிகிச்சை வழங்கப்பட்டது  என்பது தொடர்பான பல்வேறு கேள்விகளை 2 மருத்துவர்களிடமும் விசாரணை குழு முன்வைத்தது. இந்த, கேள்விகளுக்கு 2 மருத்துவர்கள் அளித்த வாக்குமூலம் வீடியோக்களாக பதிவு செய்யப்பட்டது. இவர்கள் அளித்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் எனவும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட செவிலியர்கள் மற்றும் மீதமுள்ள மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட சம்பவம் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: