திருவண்ணாமலையில் கார்த்திகை தீப விழா உச்சக்கட்டம் 2,668 அடி உயர மலையில் நாளை மகாதீபம்: 1,150 மீட்டர் திரி, 4,500 கிலோ நெய் தயார்: சிறப்பு பஸ்கள், ரயில்கள் இயக்கம்: 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்தையொட்டி திருவண்ணாமலையில் நாளை மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. முன்னதாக அதிகாலை கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படும். இதற்காக 1,150 மீட்டர் திரி, 4,500 கிலோ நெய் தயார் நிலையில் உள்ளது. 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறப்பு பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகிறது. இன்று காலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளதால் நகரம் முழுவதும் பக்தர்களால் நிரம்பியுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

 தினமும் காலையிலும் இரவிலும் பஞ்சமூர்த்திகள் மாடவீதியில் பவனி வந்து அருள்பாலித்து வருகின்றனர். கோயில் கோபுரங்கள் மின்னொளி, மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. விழாவின் 7ம்நாளான நேற்று முன்தினம் பஞ்ச ரதங்கள் வீதி உலா வந்தது. விழாவிற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. இதை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார். சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்து 2,700 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவித்தார். மேலும் இன்று முதல் 7ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கோயில், மற்றும் கோயிலை சுற்றி வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். 38 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார் என டிஜிபி தெரிவித்தார். கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்த கார்த்திகை தீபத்தின் முக்கிய விழாவான மகா தீபம் நாளை ஏற்றப்படுகிறது. மகா தீபம் ஏற்றுவதற்கு தேவையான 4,500 கிலோ முதல் தரத்திலான தூய்மையான நெய் கொள்முதல் செய்யப்பட்டு தயார் நிலையில் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், மகா தீபம் ஏற்றுவதற்காக 1,150 மீட்டர் திரி (காடா துணி), உபயதாரர்கள் மூலம் நேற்று அண்ணாமலையார் கோயிலில் வழங்கப்பட்டது.

முன்னதாக, மகாதீப திரியை பல்லக்கில் கொண்டுவந்து, அண்ணாமலையார் கோயில் 3ம் பிரகாரத்தில் உள்ள சம்மந்த விநாயகர் சன்னதியில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மகா தீப கொப்பரையும் தயார் செய்யப்பட்டது. இதையடுத்து தீபவிழாவின் உச்சக்கட்டமாக நாளை அதிகாலை கோயில் வளாகத்தில் பரணி தீபம் ஏற்றப்படும். இதையடுத்து மாலை 6 மணிக்கு கோயில் பின்புறம் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இந்த மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் பிரகாசிக்கும். வெளியூர்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் இன்று முதலே திருவண்ணாமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

மகா தீபத்திருவிழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். வடக்கு மண்டல ஐஜி தலைமையில், 5 டிஐஜிக்கள், 32 எஸ்பிக்கள் உள்பட 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் திருவண்ணாமலையில் குவிக்கப்பட்டுள்ளனர். கோயில், மாட வீதிகள், கிரிவலப்பாைத மற்றும் நகரின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், நகருக்கு வெளியே 13 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று முதல் அவை செயல்படுகிறது. அதேபோல், 58 இடங்களில் கார் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 12 ஆயிரம் வாகனங்கள் நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், நகரின் பல்வேறு இடங்களில் விழாவை நேரடி ஒளிபரப்பு செய்ய வசதியாக அகன்ற திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், திருக்கோயில், மாட வீதிகள், நகரின் முக்கிய வீதிகள் மற்றும் கிரிவலப்பாதையில் அதி நவீன சுழலும் கண்காணிப்பு காமிராக்கள் உள்பட 500க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் விழாவில் பங்கேற்க பக்தர்களை அனுமதிக்கவில்லை. இந்த ஆண்டு வழக்கம் போல அனுமதியளிப்பதால், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இன்று காலை முதல் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

எனவே, கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு வரலாறு காணாத அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், மகா தீப விழாவில் தமிழக ஆளுநர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே, உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. திருவண்ணாமலை மாவட்ட எல்லைகளில் செக்போஸ்ட் அமைத்து வாகனங்கள் சோதனை செய்யப்படுகிறது. அனைத்து சாலைகளிலும் போலீஸ் ரோந்து மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அண்ணாமலையார் கோயிலில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அனைத்து நுழைவு வாயில்களிலும் மெட்டல் டிடெக்டர் கருவி பொருத்தப்பட்டுள்ளன.

கோயில் பிரகாரங்களில் மோப்ப நாய் சோதனை, வெடி பொருட்களை கண்டறியும் சோதனையும் நடந்தது. மேலும், கோயில் 3ம் பிரகாரத்தில் முக்கிய பிரமுகர்களை பாதுகாப்பாக அமர வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதையொட்டி, கோயில் மடப்பள்ளியின் மீது நவீன கூடாரங்கள் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு வளையம் போடப்பட்டுள்ளது.

* மலைக்கு சென்றது மகா தீப கொப்பரை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப விழாவின் உச்சக்கட்ட நிகழ்வான மகா தீபம் நாளை மாலை ஏற்றப்படுகிறது. அதற்கான மகா தீப கொப்பரைக்கு இன்று அதிகாலை 5.30 மணியளவில் அண்ணாமலையார் கோயிலில் 4ம் பிரகாரத்தில் உள்ள நந்தி சிலை முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதையடுத்து மகாதீப கொப்பரையை பக்தர்கள் தோளில் சுமந்து 2,668 உயர மலை உச்சிக்கு கொண்டு சென்றனர்.

அதைத்தொடர்ந்து, மலை உச்சியில் நிலை நிறுத்தப்படும் மகாதீப கொப்பரைக்கு பாரம்பரிய வழக்கப்படி, சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும். நாளை அதிகாலை நெய் மற்றும் திரி மலைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கொப்பரையை சுற்றிலும் இரும்பு சட்டங்கள் பொருத்தப்பட்டுள்ளன. கொப்பரையின் உயரம் ஐந்தரை அடி. எடை சுமார் 200 கிலோ. தீப கொப்பரையின் மேல் விட்டம் 3.3 அடி. கீழ் பகுதி விட்டம் 2.4 அடி ஆகும்.

9ம் நாள் தீபத்திருவிழா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது. 9ம் நாள் உற்சவம் இன்று காலை கோலாகலமாக நடந்தது. காலை உற்சவத்தை முன்னிட்டு, திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து அலங்கார ரூபத்தில் புறப்பட்ட விநாயகர், சந்திரசேகரர், 3ம் பிரகாரத்தை வலம் வந்து, திட்டி வாசல் வழியாக ராஜகோபுரம் எதிரில் எழுந்தருளினர்.

அதைத்தொடர்ந்து, மூஷிக வாகனத்தில் விநாயகரும், புருஷாமுனி வாகனத்தில் சந்திரசேகரரும் சிவ வாத்தியங்கள் முழங்க மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இரவு உற்சவத்தில் மூஷிக வாகனத்தில் விநாயகரும், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியரும், கைலாச வாகனத்தில் அண்ணாமலையார் பிரியாவிடையம்மனும், காமதேனு வாகனத்தில் உண்ணாமுலையம்மனும், புலி வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.

Related Stories: