கோயம்பேடு மார்க்கெட்டில் குட்கா விற்பனையை தடுக்கவேண்டும்: போலீசாருக்கு மக்கள் கோரிக்கை

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்கவேண்டும் என்று வியாபாரிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் இருந்து லாரிகளில் காய்கறிகள், பழங்கள், பூக்கள் மற்றும் மளிகை பொருட்கள் கொண்டுவரப்படுகிறது. சென்னை உள்பட பல பகுதிகளில் இருந்து வியாபாரிகளும் பல்லாயிரக்கணக்கில் வருகை தருகின்றனர்.

இதை பயன்படுத்தி கோயம்பேடு மார்க்கெட்டில் குட்கா விற்பனை தலைதூக்கியுள்ளது. குறிப்பாக மார்க்கெட்டில் உள்ள 500க்கும் மேற்பட்ட பெட்டிக் கடைகளில் ஹான்ஸ் பாக்கெட் 80க்கும் பாக்கு 40க்கும் மாவா 50க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “கோயம்பேடு மார்க்கெட்டில் வெளிமாநிலங்களை சேர்ந்த டிரைவர்கள் அதிக அளவில் வருவதால் அவர்களுக்கு வேண்டிய குட்கா சில்லறையாகவும் மொத்தமாகவும் கிடைக்கிறது. இதுதவிர டன் கணக்கில் பெரிய கடைகளில் குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்கின்றனர். எனவே, இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

வியாபாரிகள் கூறும்போது, ‘’கோயம்பேடு மார்க்கெட்டில் ஏற்கனவே வழிப்பறி கொள்ளை, செல்போன் பறிப்பு, பைக் திருட்டு, கள்ள சந்தையில் மதுவிற்பனை நடைபெற்று வருகிறது. தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் குட்கா விற்பனையால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளது. தொழில் போட்டியால் கொலைகள் நடக்க வாய்ப்பு உள்ளது. காய்கறிகள், பழங்கள் எடுத்து வருவது போல் குட்காவையும் லாரிகளில் எடுத்துவந்து விற்பனை செய்கின்றனர். எனவே, போதை பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆரம்பத்தில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து குட்கா விற்பனையை தடுத்து நிறுத்தினர். இதுபோல் தற்போதும் போலீசார் நடவடிக்கை மேற்கொள்ள ணே்டும்’ என்றனர்.

Related Stories: