ஆர்வம் காட்டும் மக்கள்!: தமிழகம் முழுவதும் மின் இணைப்பு எண்ணுடன் ஒரே வாரத்தில் 54.55 லட்சம் ஆதார் எண் இணைப்பு..!!

சென்னை: தமிழகம் முழுவதும் மின் இணைப்பு எண்ணுடன் ஒரே வாரத்தில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில்  மின்சார இணைப்பு பெற்றுள்ள அனைத்து மின் நுகர்வோர்களும் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று தமிழக மின்சார வாரியம் அண்மையில் அறிவித்தது. ஆதார் எண் இணைப்பதற்காக சிறப்பு முகாம்களையும் மின்சார வாரியம் அமைத்துள்ளது.

டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள மின்சார வாரிய அலுவலகங்களில் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 2,811 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 2.37 கோடி மின் நுகர்வோர்கள் உள்ளார். இந்நிலையில், மின் இணைப்புடன் ஒரே வாரத்தில் 54.55 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். சிறப்பு முகாம்களிலும், ஆன்லைன் மூலமும் அவர்கள் தங்களின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கும் பணியை ஆர்வமுடன் மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது, இந்த முகாம்கள் மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் 54.55 லட்சம் பேர் மின் இணைப்புடன் தங்களுடைய ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். மின் இணைப்பு பெற்றுள்ளவர்களின் விவரங்களை முழுமையாகப் பெறும் வகையில் ஆதார் எண்ணை இணைக்க மின்சார வாரியம் அறிவுறுத்தி வருகிறது. இதேபோல் ஆதார் எண் இணைப்பதால் தற்போது தமிழக அரசு அளிக்கும் எந்த மானியமும் ரத்து செய்யப்படாது என்றும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Related Stories: