மோகனூர் காவிரிக் கரையோரம் படகு இல்லம், பூங்கா அமைத்து மேம்படுத்த நடவடிக்கை-சுற்றுலாத்துறை அலுவலர் நேரில் ஆய்வு

நாமக்கல் :  மோகனூரில், காவிரி கரையோரம் படகு இல்லம், பூங்கா அமைப்பது தொடர்பாக சுற்றுலாத்துறை அலுவலர் நேரில் ஆய்வு செய்து பார்வையிட்டார்.தமிழகத்தில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த, முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தமிழகத்தில் புதிய சுற்றுலா வசதிகளை ஏற்படுத்தும் முயற்சியில், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஈடுபட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, அதிகம் பிரபலம் அடையாத சுற்றுலா தலங்களை கண்டறியும் பணிகளை மேற்கொள்ளும்படி, மாவட்டங்களில் உள்ள சுற்றுலா அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

இதையடுத்து, நாமக்கல் மாவட்டத்தில் புதிய சுற்றுலா வசதிகளை ஏற்படுத்தும் பணிகளை சுற்றுலாத்துறை அலுவலர் மேற்கொண்டுள்ளார். நாமக்கல் அருகே கீரம்பூரில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு சொந்தமான ஓட்டல், கடந்த ஆட்சியில் மூடப்பட்டது. அதனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஜேடர்பாளையம் காவிரி கரையோரத்தில், கடந்த சில ஆண்டுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் பொழுது பூங்கா அமைக்கப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டது.

இதனிடையே, நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே, ஒருவந்தூர் காவிரி கரையோரம் படகு இல்லம் மற்றும் பூங்கா அமைக்க விவசாய முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியம், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கலெக்டர் ஸ்ரேயாசிங்கிடம் கோரிக்கை மனு அளித்திருந்தார்.இதுதொடர்பாக காவிரி கரையோரத்தில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து, மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் அபராஜிதன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாய முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியத்துடன், ஒருவந்தூர் பகுதிக்கு சென்று காவிரி கரையோரம் படகு இல்லம் அமைப்பதற்காக சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, காவிரி கரையோரம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடங்கள், படகு இல்லம் மற்றும் பூங்கா அமைப்பதன் மூலம் அந்த பகுதி மக்களுக்கு பொழுதுபோக்கு வசதி ஏற்படுத்தி கொடுப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

 இதுகுறித்து மாவட்ட சுற்றுலா அலுவலர் அபராஜிதன் கூறுகையில், ‘பொதுவான நீர்நிலை தேக்கம் உள்ள இடங்களில், படகு இல்லம் அமைக்கலாம். மோகனூர் காவிரி கரையோரம் அத்தகைய இடங்கள் இருக்கிறதா என ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், அங்கு பூங்கா அமைப்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. பொழுதுபோக்கு, பூங்கா அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கை அளிக்கும்படி, நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளருக்கு சுற்றுலாத்துறை மூலம் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது,’ என்றார்.

கமலாலய குளத்தில் மீண்டும் படகுசவாரி

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் மலைக்கோட்டையையொட்டி, கமலாலய குளம் அமைந்துள்ளது. இந்த குளம் கடந்த 2012ம் ஆண்டு தூர்வாரப்பட்டது. குளத்தை சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்பட்டு, குளம் மாசுபடாமல் தடுக்கப்பட்டது. கடந்த 2013ம் ஆண்டு நகராட்சி நிர்வாகம் சார்பில் படகு சவாரி துவங்கப்பட்டது. குத்தகைதாரர்கள் மூலம் நகராட்சி நிர்வாகம் படகுசவாரியை நடத்தியது. ஆனால், இடையில் கமலாலய குளம் வறண்டதால் படகுசவாரி நிறுத்தப்பட்டது.

அதற்கு பின்பு, பல முறை மழை காலங்களில் குளம் நிரம்பியும் படகு சவாரி மீண்டும் தொடங்கப்படவில்லை. இதனால், படகுகள் குளத்தின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, படகுசவாரியை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர், நகராட்சி நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

Related Stories: