தர்மபுரி மாவட்டத்தில் அதிரடி வேட்டை 11 மாதத்தில் 908 டன் ரேஷன் அரிசி பறிமுதல்-19 வாகனங்களும் சிக்கியது

தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் நடப்பாண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலக்கட்டத்தில் பதுக்கல், கடத்தலின்போது 908 டன் ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக 158 பேர் கைது செய்யப்பட்டு, 19 கடத்தல் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழக அரசு பொது விநியோகத்திட்டம் மற்றும் சிறப்பு பொது விநியோகத்திட்டத்தின் மூலம், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம், அத்தியாவசிய பொருட்கள்  விநியோகம் செய்யப்படுகிறது. இவ்வாறு விநியோகம் செய்யப்படும் பொருட்களை, சிலர் முறைகேடாக கடத்தி கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை போலீசார், தொடர்ந்து ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.

அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடும் நபர்கள், அதற்கு உடந்தையாக செயல்படும் நபர்கள் மீது இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் 1955ன் படி, வழக்குப்பதிவு செய்து மேல்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை, கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டம் 1980ன் படி, தடுப்பு காவலில் வைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 தர்மபுரியில் கடந்த 2013ம் ஆண்டு, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அலுவலகம் திறக்கப்பட்டது. சேலம் டிஎஸ்பி விஜயகுமார் தலைமையில், ஒரு எஸ்ஐ உள்ளிட்ட 6 பேர் இதில் பணியாற்றி வருகின்றனர். கிருஷ்ணகிரி இன்ஸ்பெக்டர், தர்மபுரிக்கு பொறுப்பு அதிகாரி ஆவார். தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் முதல் காரிமங்கலம் சப்பாணிப்பட்டி தேசிய நெடுஞ்சாலை வரையும், பாப்பிரெட்டிப்பட்டி மஞ்சவாடி கணவாய் முதல் அரூர் நரிப்பள்ளி வரையும், மாவட்டத்தின் பல்வேறு முக்கிய சந்திப்பு சாலைகளில் குடிமைப்பொருள் வழங்கல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஜனவரி முதல் நவம்பர் வரையிலான 11 மாதத்தில், 908 டன் ரேஷன் அரிசி பதுக்கல் மற்றும் கடத்தப்பட்டதை போலீசார் கண்டறிந்து பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக தர்மபுரி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார், 145 வழக்குப்பதிவு செய்து, 158 பேரை கைது செய்துள்ளனர்.

மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 19 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல், வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர், வர்த்தக ரீதியாக பயன்படுத்தியதாக 19 வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 112 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 120 வழக்குகள் பதிவு செய்து, 140 பேர் கைது செய்யப்பட்டனர். 17 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 7 காஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்படும் ரேஷன் அரிசி மூட்டைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்பு கிடங்கில் ஒப்படைக்கப்படுகிறது.

 இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 1077 எண்ணில் வரும் தகவல்கள் மற்றும் கலெக்டர், அரசுத்துறை அலுவலகங்களுக்கு வரும் ரகசிய தகவல்களை வைத்து, நாங்கள் நேரடியாக சோதனை செய்து கடத்தல் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வருகிறோம். நடப்பாண்டில் இதுவரை(11 மாதங்கள்) பதுக்கல் மற்றும் கடத்தப்பட்ட 908 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

உணவுப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு, குறைந்தபட்சம் 3 மாதங்கள் முதல் அதிகபட்சமாக 7 வருடங்கள் வரை, சிறை தண்டனை விதிக்க முடியும். ₹5 ஆயிரத்துக்கு குறையாமல் அபராதம் விதிக்கவும் வழி வகை உள்ளது. இரண்டாவது முறையாகக் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு, 6 மாதங்களுக்கு குறையாத சிறை தண்டனையும், தொடர்ச்சியாக குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கவும் வழிவகை இருக்கிறது. குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை போலீசார், தொடர்ந்து ரோந்து பணி மேற்கொண்டு, ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கலை தடுத்து வருகின்றனர். உணவுப்பொருட்கள் கடத்தலை தடுப்பதற்கு ரோந்து குழுவும் இயங்கி வருகிறது,’ என்றனர்.

Related Stories: