திருவண்ணாமலை தீபத் திருவிழா கோலாகலம்: ஆன்லைனில் நாளை டிக்கெட் விநியோகம்; 7ம் நாளான இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தரிசனத்திற்காக நாளை ஆன்லைனில் டிக்கெட் விநியோகம் தொடங்குகிறது. 7ம் நாளான இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.  திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமர்சையாக நடந்து வருகிறது.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழா உற்சவத்தில் தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரரும், இரவில் பஞ்சமூர்த்திகளும் பல்வேறு வாகனங்களில் மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். வரும் 6ம் தேதி நடைபெறும் பரணி தீபம் மற்றும் மகா திருவிழாவிற்கு இந்த ஆண்டு சுமார் 30 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் வருவதற்கு வசதியாக 2,700 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதோடு, சிறப்பு ரயில்களும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தீபத்திருவிழாவை முன்னிட்டு, வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில், 4 டிஐஜிக்கள் மற்றும் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். தீபத்திருவிழாவில் 6ம் நாளான நேற்றிரவு வெள்ளி தேரோட்டம் நடந்தது. திருக்கல்யாண மண்டபத்தில் அலங்காரம், தீபாராதனை முடிந்ததும், திட்டி வாசல் வழியாக ராஜகோபுரம் எதிரில் இரவு 10 மணியளவில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். பின்னர், வெள்ளி விமானத்தில் விநாயகரும், வெள்ளி விமானத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியரும், வெள்ளித் தேரில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரும், இந்திர விமானத்தில் பராசக்தி அம்மனும், வெள்ளி விமானத்தில் சண்டிகேஸ்வரரும் மாட வீதியில் பவனி வந்தனர்.

அதைத்தொடர்ந்து, விழாவின் 7ம் நாளான இன்று காலை மகா தேரோட்டம் எனப்படும் பஞ்ச ரதங்கள் பவனி தொடங்கியது. இன்று அதிகாலை அண்ணாமலையார் கோயிலில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், பன்னீர் உள்பட பல்வேறு பொருட்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இதைதொடர்ந்து பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், அண்ணாமலையார் பிரியாவிடை, உண்ணாமுலையம்மன், சண்டிகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். இதையடுத்து மகாதேரோட்டம் தொடங்கியது. முதல் தேராக விநாயகர் தேர் மாடவீதியில் பவனி வந்தது.

இதையொட்டி விநாயகர் திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து விநாயகர், அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாடவீதியை சுற்றி வந்த விநாயகர் தேர் நிலையை அடைந்ததும், 2வதாக சுப்பிரமணியர் தேரோட்டம் நடந்தது. அதைத்தொடர்ந்து, மதியம் 1 மணி அளவில் அண்ணாமலையார் பிரியாவிடை அருள்பாலிக்கும் பெரிய தேர் எனப்படும் ‘மகா ரதம்’ புறப்பாடு நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா’ என விண்ணதிர முழக்கமிட்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

மகா ரதம் நிலையை அடைந்ததும், பராசக்தி அம்மன் தேர் புறப்பாடு நடைபெறும். அம்மன் தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்துச்செல்வது அதன் தனிச்சிறப்பாகும். தேரோட்டத்தின் நிறைவாக, சண்டிகேஸ்வரர் தேர் பவனி நடைபெறும். இந்நிலையில் பரணி, மகா தீப தரிசனத்திற்கு நாளை ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்படுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், வரும் 6ம் தேதி நடைபெறும் பரணி தீபம் மற்றும் மகா தீப தரிசனம் காண பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதன்படி, வரும் 6-ம் தேதி காலை 4 மணிக்கு பரணிதீபம் தரிசனம் காண ரூ.500 கட்டணத்தில் 500 அனுமதி சீட்டுகளும், அன்று மாலை 6 மணிக்கு மகாதீபம் தரிசனம் காண ரூ.600 கட்டணத்தில் 100 அனுமதி சீட்டுகள் மற்றும் ரூ.500 கட்டணத்தில் ஆயிரம் அனுமதி சீட்டுகளும் வழங்கப்பட உள்ளன.

இந்த அனுமதி சீட்டுகளை, https://annamalaiyar.hrce.tn.gov.in எனும் அண்ணாமலையார் திருக்கோயில் இணையதள வழியாக கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். அதையொட்டி, நாளை (4ம் தேதி) காலை 10 மணி முதல் இந்த இணையதளம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் டிக்ெகட் பதிவிறக்கம் செய்து, பரணி தீபம் தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் வரும் 6ம் தேதி அதிகாலை 2 மணிமுதல் 3 மணிவரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஆன்லைன் மூலம் டிக்ெகட் பதிவிறக்கம் செய்து, மகாதீபம் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 6ம் தேதி மதியம் 2.30 முதல் 3.30 வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

2ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம்

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருவண்ணாமலையில் நடந்த கார்த்திகை தீபத்திருவிழவில் மாடவீதியில் சுவாமி வீதியுலாவிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதற்கு மாற்றாக கோயில் 5ம் பிரகாரத்தில் சுவாமி பவனி நடைபெற்றது. பக்தர்களுக்கும் அனுமதி வழங்கவில்லை. அதேபோல் மகாதேரோட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் விலக்கிகொள்ளப்பட்டதால் தேர் திருவிழா இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்துடன் நடைபெறுகிறது. எனவே, தீபத்திருவிழா தேரோட்டத்தை தரிசிக்க வெளியூர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டனர்.

தீபவிழா தகவல் அறிய கட்டணமில்லா தொலைபேசி

தீபத்திருவிழா பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள வசதியாக, கட்டணமில்லா தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதையொட்டி, 1800 425 3657 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பத்தர்கள் தகவல்களை பெறலாம்.

3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

தேரோட்டத்தையொட்டி பாதுகாப்புக்காக 2 தீயணைப்பு வாகனங்கள், மருத்துவ குழுவினருடன் கூடிய 4 ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவை மகா ரதத்தை பின்தொடர்ந்து சென்றது. தேர் சக்கரங்களுக்கு கட்டைப் போடும் சேவை பணியாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, ஒரே மாதிரியான சீருடை (டி- சர்ட்) வழங்கப்பட்டுள்ளன. அதோடு, அவர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் காப்பீடும் செய்யப்பட்டுள்ளது.  மேலும் எஸ்பி கார்த்திகேயன் தலைமையில், சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: