பயோ மெட்ரிக் முறையில் பணியாளர் வருகையை பதிவு செய்ய 315 அலுவலகங்களில் முகப்பதிவு முறை; மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சியில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட 14,897 நபர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் தண்டையார்பேட்டை, ராயரம், திருவிக நகர், அண்ணாநகர் ஆகிய மண்டலங்களிலும், அம்பத்தூர் மண்டலத்தில் பகுதி அளவும் தூய்மைப் பணி மற்றும் சாலைப் பணிகளில் ஈடுபடும் 9,048 நபர்களும் அடங்குவர். திருவொற்றியூர் மணலி, மாதவரம் ஆகிய மண்டல  தூய்மைப் பணிகளில் 3220  பேரும், தேனாம்பேட்டை கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய மண்டல தூய்மைப் பணிகளில் 10,839 பேரும் ஈடுபட்டுள்ளனர்.

ஒப்பந்த நிறுவனத்தின் சார்பில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளும் மண்டலங்களில் ஏற்கனவே பயோ மெட்ரிக் முறையில் வருகைப் பதிவு செய்யும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

மாநகராட்சி ஊழியர்களின் வருகைப் பதிவையும் பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, பணியாளரின் வருகையானது முகப்பதிவு  முறையில் பதிவு செய்ய முதற்கட்டமாக 315 இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சி அலுவலகங்களில் பயோ மெட்ரிக் வருகை பதிவு முறையை பின்பற்றும் வகையில் தலைமை அலுவலகத்தில் 103, வட்டார அலுவலகங்களில் 3, ஒரு மண்டல அலுவலகத்திற்கு 2 என 5 மண்டல அலுவலகங்களில் 20, பகுதி அலுவலகங்களில் 47, வார்டு அலுவலகங்களில் 200 வாகன நிறுத்த இடங்களில் 20 மற்றும் இதர இடங்களுக்கு 5 என மொத்தம் 315 எண்ணிக்கையிலான பயோ மெட்ரிக் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த அலுவலகங்களில் பணியாளர்களின் வருகைப்பதிவு பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படுகிறது.

இதுதவிர, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சமுதாய நல மையங்களிலும் பயோ மெட்ரிக் முறையிலான வருகைப்பதிவு மேற்கொள்ள 184 இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு பொருத்தப்பட உள்ளன.

Related Stories: