ஆக்கிரமிப்பு புகார் கொடுத்ததால் தாக்குதல்; சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டு சமூக ஆர்வலர் தற்கொலை முயற்சி

துரைப்பாக்கம்: பெருங்குடி கல்லுக்குட்டை திருவள்ளுவர் நகர், ஜான்சிராணி தெருவை சேர்ந்தவர் கணேசன் (52). சமூக ஆர்வலரான இவர், கடந்த சில நாட்களுக்கு முன், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சமூக விரோதிகள் ஆக்கிரமித்து விற்பனை செய்வதாக மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இதனால், ஆத்திரமடைந்த ஆக்கிரமிப்பாளர்கள், கணேசன் வீட்டின் ஒரு பகுதியில் வாடகைக்கு வசிக்கும் பிரபு என்பவருடன் சேர்ந்து, அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் கணேசன் புகார் அளித்தார். அப்போது, அவருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டள்ளது. இந்நிலையில், போலீசார் தன்னை மிரட்டியதாக கூறி, கணேசன் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

கணேசன் விஷம் குடிப்பதற்கு முன், சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘பெருங்குடி கல்லுக்குட்டையில் சதுப்பு நிலம் அதிகம் உள்ளது. இதை ரவுடிகள் மற்றும் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமாரும்  ஆக்கிரமித்து விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தேன். இந்த தகவலை அறிந்த துரைப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் ரவுடிகள் சேர்ந்து என் வீட்டில் வாடகைக்கு இருக்கும் பிரபுவும் சேர்ந்து  என்னை அடித்து உதைத்து நிர்வாணப்படுத்தினர். இதில், கவர்னர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என கூறியுள்ளார். இதுகுறித்து துரைப்பாக்கம் உதவி கமிஷனர் ஜீவானந்தம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: