ஊர் தலைவர் கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை: சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: இரு தரப்பு மோதலை தட்டிக் கேட்ட ஊர் தலைவரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கொருக்குப்பேட்டை ஜீவா நகரில் 30 ஆண்டுகளாக ஊர் தலைவராக பதவி வகித்து வந்தவர் பாஸ்கரன். அங்குள்ள பாரதி நகரை சேர்ந்த இளைஞர்களுக்கும், ஜீவா நகர் பகுதி இளைஞர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இதுகுறித்து, பாரதி நகர் பகுதியினரை பாஸ்கரன் தட்டிக்கேட்டுள்ளார். கடந்த 2013 பிப்ரவரி 12ம் தேதி பாஸ்கரன் தெருவில் பேசிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த பாரதி நகரை சேர்ந்த முருகன் (25) அவரை கத்தியால் தலையில் வெட்டியுள்ளார். இதில் பாஸ்கரன் பலியானார்.  

இதுகுறித்து விசாரணை நடத்திய ஆர்.கே.நகர் போலீசார் முருகனை கைது செய்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் சாட்சி விசாரணை சென்னை மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி முன்பு நடந்தது. மாநகர கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் டி.சுரேஷ் ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்கள், சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் முருகனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Related Stories: