தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் 1500 பேருக்கு ஊக்கத்தொகை: அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு

சென்னை: தமிழ்மொழி இலக்கிய திறனறிவுத் தேர்வில் வெற்றி பெற்ற 1500 மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.1500 ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். தமிழ்மொழி இலக்கிய திறன் அறிவு தேர்வில் வெற்றி பெற்ற 1500 மாணவர்களின் தேர்வு முடிவுகள் மற்றும் ஊக்கத் தொகை வழங்குவது தொடர்பான அறிவிப்பு நிகழ்வு சென்னை, தலைமைச் செயலகத்தில் நேற்று  நடைபெற்றது. இதில் தொழில் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்மொழி இலக்கிய திறன் அறிவு தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நடந்தது. இதில் 2,50,731 மாணவர்கள் தேர்வு எழுதினர். அவர்களில் அரசுப்பள்ளி மாணவர்கள் 1,18,057 பேரும், அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 54,247 பேரும், தனியார் பள்ளி மாணவர்கள் 78,400 பங்கேற்றனர். அவர்களில் அரசுப் பள்ளிகளில் படித்த 967, அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்கள் 123, தனியார் பள்ளி மாணவர்கள் 410 பேர் என 1500 ஊக்கத் தொகை பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த 1500 பேருக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1500 ஊக்கதொகை வழங்கப்படும். மேலும் தேர்வு முடிவுகள் அரசுத் தேர்வுத்துறையின் www.dge.tn.gov.in என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த திறனறித் தேர்வில் நாகப்பட்டினத்தை சேர்ந்த அபிநயா 100க்கு 97 மதிப்பெண் பெற்று முதல் இடத்தில் உள்ளார். அதிகமாக மாணவிகளே தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் திறன் வளர்ப்பு பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்க முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன். இது குறித்து மைக்ரோசாப்ட் அதிகாரிகள் கலந்து பேசி முடிவு அறிவிப்பதாக கூறினர். பேராசிரியர் அன்பழகன் அனைவருடன் இணைந்து பழகக் கூடியவர் அவரது சிலையை பள்ளி கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தில் வைப்பதில் எந்தவித எதிர்ப்பும் இல்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது: ஆதிச்சநல்லூர், பொருநை, கீழடி தமிழின் பாரம்பரியத்தை பள்ளி மாணவர்கள் தெரிந்துக்கொள்ளும் விதத்தில் பாடப்புத்தகத்தில் சேர்க்கப்படும். வரும் காலாண்டுகளில் தமிழ் மொழி இலக்கியத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசனை செய்வோம்.

* சென்னை புத்தககாட்சியில் 18 நாடுகள் பங்கேற்பு

மேலும் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில் ‘‘சென்னையில் விரைவில் உலகளாவிய  பதிப்பகங்கள் பங்கேற்கும் வகையில் புத்தக காட்சி நடக்க இருக்கிறது.  இதில் 26 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 18 நாடுகள் கலந்து  கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளன. இந்த புத்தக காட்சியின் மூலம் அறிவு  பரிமாற்றம் மற்ற நாடுகளுடன் ஏற்படும். மேலும், நமது மொழியில் உள்ள  புத்தகங்களை பிற நாட்டின் மொழிகளில் மொழி பெயர்த்துக் கொள்ள வசதியாக  நிதியுதவி வழங்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது’’ என்றார்.

Related Stories: